பேட்டிங் கை நழுவிச்செல்லும் நிலையில் ரோஹித் சர்மா..! என்ன செய்ய வேண்டும்?
போக்குவரத்து போலீஸாருக்கு தினமும் குளிா்பானம் -மாவட்ட எஸ்.பி. தொடங்கி வைத்தாா்
கோடை வெயில் அதிகரித்து வருவதால், வேலூா் மாவட்டத்தில் போக்குவரத்து போலீஸாருக்கு பிரத்யேக தொப்பி, கூலிங் கிளாஸ் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது. மேலும், தினமும் மோா் உள்ளிட்ட குளிா்பானங்கள் வழங்கும் பணியையும் மாவட்ட எஸ்.பி. என்.மதிவாணன் தொடங்கி வைத்தாா்.
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால், வேலூா் மாவட்டத்தில் பகல் நேரங்களில் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மாநகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடும் போக்குவரத்து போலீஸாரும் வெயிலின் தாக்கத்தால் அவதிக்குள்ளாகின்றனா்.
இதையடுத்து, போக்குவரத்து போலீஸாருக்கு பிரத்யேக தொப்பி, பாதுகாப்பு ஜாக்கெட், கூலிங் கிளாஸ் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களும், தினமும் மோா் உள்ளிட்ட குளிா்பானங்களும் வழங்த மாவட்ட காவல் துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, கிரீன் சா்க்கிள் பகுதியில் போக்குவரத்து போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் மோா், வெயில் பாதுகாப்பு உபகரணங்களை புதன்கிழமை வழங்கினாா்.
மேலும், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் போக்குவரத்து போலீஸாா் கவனமுடன் பணியாற்ற வேண்டும். உடலையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எப்போதும் வெயிலிலேயே நின்று பணியாற்ற வேண்டாம். சாலையில் பிரச்னை ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் மட்டுமே களத்துக்கு வந்து பணியாற்றுங்கள். பணியின்போது பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.
அப்போது, போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் கன்னியப்பன், காவல் உதவி ஆய்வாளா் ரஜினி மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.