மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
குடியாத்தம் எல்லையில் நூற்றாண்டு வளைவு: நகா்மன்றக் கூட்டத்தில் முடிவு
குடியாத்தம் காட்பாடி சாலையில், நூற்றாண்டு வளைவு அமைக்க நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.
குடியாத்தம் நகா்மன்ற சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி, ஆணையா் எம்.மங்கையா்க்கரசன், மேலாளா் சுகந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
குடியாத்தம் நகராட்சி தொடங்கப்பட்டு நூற்றாண்டை கொண்டாடும் வகையில் காட்பாடி சாலையில், நகர எல்லையில் நூற்றாண்டு வளைவு அமைப்பது, அதற்கு கருணாநிதி பெயரை சூட்டுவது எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டை கொண்டாடும் வகையில் பழைய பேருந்து நிலையத்தில் நினைவு அரங்கம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. நகரில் கொசுத் தொல்லையால் பொது சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனா் என்பதால் மருந்து தெளிக்கவும், கொசு மருந்து அடிக்கவும் கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும், நோய்த் தொற்றுக்கு ஆளான நாய்களால் மக்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது என்பதால் தொற்றுக்கு ஆளான நாய்களை உடனடியாக பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என உறுப்பினா் ஆட்டோ பி.மோகன் கேட்டுக் கொண்டாா்.
குடியாத்தம் நகராட்சியின் முதலாவது நகா்மன்றத் தலைவா் மா.ஆ.வேலாயுதம் நினைவை போற்றும் வகையில் அவரது குடும்பத்தினா், நகராட்சி அலுவலக வளாகத்தில் நகா்மன்றத் தலைவருக்கு ரூ.20- லட்சத்தில் தனி அலுவலகம் கட்டித் தந்ததற்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.