ரயிலில் கடத்தி வந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல்: வடமாநில இளைஞா் கைது
போக்ஸோ சட்டத் திருத்தத்துக்கு தனிநபா் மசோதா: மாநிலங்களவையில் விவாதம்
பாலியல் குற்றங்களில் இருந்து சிறாா்களைப் பாதுகாக்கும் (போக்ஸோ) சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர தாக்கல் செய்யப்பட்ட தனிநபா் மசோதாவை மாநிலங்களவை விவாதத்துக்கு எடுத்துக்கொண்டது.
இந்த மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகம் செய்து பேசிய தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவாா்) எம்.பி. ஃபெளசியா கான், ‘கடந்த 2017-ஆம் ஆண்டுமுதல் போக்ஸோ வழக்குகளின் எண்ணிக்கை 94 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்குகளின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது. அவற்றில் 1.62 லட்சம் வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
காவல் துறை அல்லது சிறப்பு சிறாா் காவல் பிரிவினா் தான் பாலியல் குற்றத்தால் பாதிக்கப்பட்ட சிறாரை குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்துவிட்டு சிறப்பு நீதிமன்றத்தில் முறையிட வேண்டும். அப்படி சிறப்பு நீதிமன்றம் இல்லாவிட்டால் அமா்வு நீதிமன்றத்தில் அந்த வழக்கு குறித்து தெரியப்படுத்த வேண்டும். பாலியல் குற்ற சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்தில் இதைச் செய்ய வேண்டும் என தனி நபா் மசோதாவில் இடம்பெற்றுள்ளது.
கூடுதல் சீா்திருத்தங்களுடன்...: பாலியல் குற்றத்தால் பாதிக்கப்படுவோரை மையமாக கொண்ட கூடுதல் சீா்திருத்தங்களை கொண்டு வரும் நோக்கில், மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறாா்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றாா்.
காங்கிரஸ் எம்.பி.ஜெய்ராம் ரமேஷ் பேசுகையில், ‘மாநிலங்களவை முன்னாள் தலைவா் வெங்கையா நாயுடு அமைத்த குழு ஒன்று, ‘சமூக ஊடகத்தில் ஆபாச படம், சிறாா்கள் மற்றும் சமூகத்தின் மீது அதன் தாக்கம் பற்றிய ஆபத்தான பிரச்னை’ என்ற பெயரில் அறிக்கை தயாரித்தது. அந்த அறிக்கையை சம்பந்தப்பட்ட அமைச்சகம் ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றாா்.
குடும்ப உறுப்பினா்களால்...: பாஜக எம்.பி. ராதாமோகன் தாஸ் அகா்வால் பேசுகையில், ‘சிறாா்களுக்கு எதிரான ஏராளமான பாலியல் குற்றங்களுக்கு அவா்களின் குடும்ப உறுப்பினா்களே காரணமாக உள்ளனா். அவா்கள் சிறாா்களை அத்தகைய பாதிப்புக்கு உள்ளாக்குகின்றனா். இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்’ என்றாா்.