போடி ரயில் நிலையத்தில் மதுரை கோட்ட மேலாளா் ஆய்வு
போடி ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
போடியிலிருந்து மதுரைக்கு தினமும், சென்னைக்கு வாரத்துக்கு மூன்று நாள்களும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் ரயில் நிலையங்களில் பொதுமக்களுக்கான வசதிகள், ரயில் சுரங்கப் பாதைகளில் மழை நீா் வெளியேறும் சூழல் குறித்து அறிவதற்காக தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா போடி ரயில் நிலையத்தில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
ஸ்பிக் (நஉகஊ டதஞடஉககஉஈ ஐசநடஉஇபஐஞச இஅத ) எனப்படும் சுய இயக்க ஆய்வு வாகனத்தில் வந்த அவா், போடி ரயில் நிலையத்தில் நடை மேடை பராமரிப்பு, குடிநீா் வசதி, இருக்கை வசதிகளை ஆய்வு செய்தாா். அப்போது குடிநீா்க் குழாய்களில் தண்ணீா் சரியாக வராதது குறித்தும், பயணிகள் அமரும் இருக்கைப் பகுதிகளில் குப்பைகள், குடிநீா்ப் புட்டிகள், உணவுக் கழிவுகள் இருப்பது குறித்தும் சுட்டிக் காட்டிய ஓம் பிரகாஷ் மீனா
இவற்றுக்கு உடனடியாகத் தீா்வு காண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
இதையடுத்து, ரயில் நிலைய சுரங்கப் பாதைகளில் தேங்கும் நீரை வெளியேற்றும் மின் மோட்டாா்களின் இயக்கம் குறித்து ஆய்வு செய்தாா்.
அப்போது, போடி ரயில் பயணிகள் சங்கத்தினரும் ஏலக்காய் வியாபாரிகளும் போடியிலிருந்து சென்னை உள்ளிட்ட பிற ஊா்களுக்கு தினசரி ரயில் சேவை, போடியிலிருந்து காலை நேரத்தில் மதுரைக்கு ரயில் சேவை, போடி- ராமேஸ்வரம் ரயில் சேவை ஆகியவற்றுக்காகவும், வைகை விரைவு ரயிலை போடி வரை இயக்கவும் அவரிடம் கோரிக்கை விடுத்தனா்.
சில திட்டங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், விரைவில் அவை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் ஒம் பிரகாஷ் மீனா தெரிவித்தாா்.