புலிப்பல் டாலர் அணிந்திருந்ததால் மலையாள ராப்பர் கைது; "பட்டியலினத்தவர் என்பதால்?...
போதைக்காக வலி மாத்திரைகள் விற்பனை: 3 மருந்துக் கடைகளின் உரிமங்கள் ரத்து
சேலத்தில் போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்த 3 மருந்துக் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சேலம் மன்னாா்பாளையம் பிரிவு சாலை பகுதியில் கடந்த ஜனவரியில் வீராணம் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகமளிக்கும் வகையில் நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில் அவா் அல்லிகுட்டையைச் சோ்ந்த மணிகண்டன் என்பதும், வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இந்த மாத்திரையை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் ஏற்றிக்கொண்டு போதையில் அவா் இருந்ததும் தெரியவந்தது.
அவா் கொடுத்த தகவலின்பேரில் இந்த போதை மாத்திரையை அவருக்கு வழங்கிய 3 பேரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அதில் சேலம் அழகுசமுத்திரம் கோகுல்ராஜ் (29), பாகல்பட்டி தினேஷ் கண்ணன் (27), அமரகுந்தி கோகுலன் (26) ஆகிய 3 போ் மாத்திரைகளை விநியோகித்ததும், மூவரும் அப்பகுதியில் மருந்துக் கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவா்களிடம் இருந்து 2,615 போதை மாத்திரை, ஊசிகள், இரண்டு சக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வீராணம் போலீஸாா் வழக்குப் பதிந்து 3 பேரை அண்மையில் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கில் போதை மாத்திரை விற்பனை செய்த சம்பந்தப்பட்ட மருந்துக் கடைகளில் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து 3 கடைகளின் உரிமங்களையும் ரத்துசெய்ய அதிகாரிகளுக்கு பரிந்துரைத்தனா்.
பின்னா் மேல் அதிகாரிகளின் உத்தரவின்படி சேலம் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் அந்த 3 கடைகளின் உரிமங்களை ரத்துசெய்தனா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘மருந்துக் கடைகளில் தூக்க மாத்திரை, வலி நிவாரண மருந்து, மாத்திரைகளை மருத்துவா்களின் பரிந்துரை சீட்டு இன்றி கொடுப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனனா்.