போதைப்பொருள் விவகாரம்: நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன்!
போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வைத்திருந்ததாக பிரதீப் என்பவரை கைது செய்த சென்னை நுங்கம்பாக்கம் போலீசார், அவரிடம் விசாரணை நடத்தியதில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து போதைப்பொருள் பெற்றதாகவும் இதுபோல நடிகர்கள் பலரும் பெற்றதாகக் கூறியுள்ளார்.
அவர் அளித்த தகவலின் அடிப்படையில், பிரபல திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் மருத்துவப் பரிசோதனையில் அவர் கொக்கைன் பயன்படுத்தியது உறுதியானதையடுத்து கைது செய்யப்பட்டார்.
பிரதீப் அளித்த தகவலின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் தற்போது காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். நடிகர் கிருஷ்ணா போதைப்பொருள் பயன்படுத்தினரா என்பது விசாரணையில் தெரியவரும்.
இதனிடையே அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்தான் தன்னை போதைப்பொருள் பயன்படுத்த பழக்கப்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த், காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். படத்தில் நடித்ததற்காக தனக்கு தர வேண்டிய ரூ. 10 லட்சத்திற்கு கொக்கைன் கொடுத்ததாகவும் பின்னர் தானே அதற்கு அடிமையானதாகவும் கூறியுள்ளார்.
நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7 வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது!