போப் உடல்நிலை கடுமையாக பாதிப்பு? தீவிர நிமோனியா தொற்று..!
ரோம் : போப் பிரான்சிஸ் உடல்நிலை நிமோனியா தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போப் பிரான்சிஸ் முச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் கடந்த பிப். 14-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
முதலில் மருத்துவமனைக்குச் செல்ல தயக்கம் காட்டிய போப் பிரான்சிஸ், மருத்துவர்களின் கட்டாயத்தின்பேரில் அதன்பின் மருத்துவனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அன்னாரது நுரையீரலின் ஒரு பகுதி பல ஆண்டுகளுக்கு முன் அகற்றப்பட்டுவிட்ட நிலையில், தற்போது நோயின் தீவிரம் அதிகரித்து காணப்படுகிறது.
அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அவருக்கு ஆண்டிபயோடிக் மருந்துகள் அளிக்கப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இதனிடையே, ‘தான் இம்முறை உயிர் பிழைப்பது கடினம்’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் போப் பிரான்சிஸ் தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
எனினும், போப் நேற்றிரவு நன்றாக தூங்கி எழுந்திருப்பதுடன் இன்று(பிப். 19) காலை வழக்கம்போல சிற்றுண்டி எடுத்துக்கொண்டதாகவும் வாடிகன் தரப்பிலிருந்து புதன்கிழமை(பிப். 19) தெரிவிக்கப்பட்டுள்ளது.