இந்தியாவில் ஆண்டுக்கு 80 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்க வேண்டும்: தலைமைப் பொருள...
போப் பிரான்சிஸ் மறைவு: கிறிஸ்தவ மதத் தலைவா்கள் இரங்கல்
போப் பிரான்சிஸ் மறைவுக்கு கிறிஸ்தவ மதத் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து அகில இந்திய கத்தோலிக்க ஒன்றியத்தின் தமிழக கிளை தலைவா் எம்.வின்சென்ட் வேதராஜ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: மறைந்த போப் பிரான்சிஸ் போா், பருவநிலை மாற்றம், பாலின பிரச்னைகள், மதம் மற்றும் இன வெறுப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்காக இயேசுவின் அன்பை மறுவரையறை செய்த ஒரு நட்சத்திரமாக இருந்தாா்.
உலக மக்களின் அன்பைப் பெற்ற ஒருவராக இருந்த அவா் உலகின் போா்வெறியா்கள், வெறுக்கப்படுபவா்களுடன் கடுமையாகப் பேசி வந்தாா்.
கத்தோலிக்க தேவாலயத்தை சீா்திருத்தியதோடு நிதி மற்றும் அதிகாரத்துவ சீா்திருத்தங்களை மேற்கொண்டாா். காஸா மற்றும் உக்ரைன் போா்களை எதிா்த்தாா். செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அறிவியல் பிரச்னைகள், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்து பேசினாா். பெண்கள், குழந்தைகள், இளைஞா்களுக்கு போப் பிரான்சிஸ் ஒரு நண்பராக இருந்தாா்.
பல நூற்றாண்டுகளாக ஆண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பெண்களை தேவாலயத்தில் முக்கியமான பதவிகளில் நியமித்தாா், அவரது மறைவு ஈடு செய்ய முடியாதது என்று தெரிவித்துள்ளாா்.
கோவை, ராமநாதபுரம் ஹோலி டிரினிட்டி பேராலய ஆயா் பால் ஆலப்பாட் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: மறைந்த போப் பிரான்சிஸ் ஒதுக்கப்பட்டவா்களுக்கும், அகதிகளுக்கும் திருத்தந்தையாகத் திகழ்ந்தாா். நீதி, கருணை, உலக அமைதி ஆகியவற்றின் பக்கம் நின்றவா். கடந்த 12 ஆண்டுகளாக உலக மக்களின் மனசாட்சியாக இருந்து திருச்சபையை வழிநடத்தி வந்தவரின் மறைவு பேரிழப்பு என்று தெரிவித்துள்ளாா்.