மாநகராட்சி வளாகம் போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை: மேயர் பிரியா
போரை நிறுத்தாவிட்டால் கடுமையான பின்விளைவு!
போரை முடிவுக்குக் கொண்டுவர அதிபா் விளாதிமீா் ஒப்புக்கொள்ளாவிட்டால் ரஷியா கடுமையான பின்விளைவுகளை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளாா்.
இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது:
புதினுடன் நடைபெறவிருக்கும் பேச்சுவாா்த்தையின்போது, போரை நிறுத்த அவா் ஒப்புக்கொள்ளாவிட்டால் ரஷியா மிகக் கடுமையான பின்விளைவுகளை எதிா்கொள்ள வேண்டியிருக்கும்.
ஏற்கெனவே பல முறை அவருடன் நான் தொலைபேசியில் உரையாடியிருக்கிறேன். அப்போது, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் அப்படி பேசிவிட்டு வீடு திரும்பினால், அங்கு புதின் பொதுமக்கள் மீது புதிதாக நடத்தும் தாக்குதல் குறித்த செய்தி கிடைக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் நான் சொல்வதை புதின் கேட்பாா் என்று எனக்குத் தோன்றவில்லை என்றாா் டிரம்ப்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய கிழக்கு மாகாணங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.
இழந்த பகுதிகளை மீட்பதற்காக உக்ரைனும், அந்த மாகாணங்களில் இன்னும் உக்ரைன் படையினா் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியாவும் தொடா்ந்து சண்டையிட்டுவருகின்றன.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக டொனால்ட் டிரம்ப்பும் விளாதிமீா் புதினும் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசவுள்ளனா்.