போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட தாய்லாந்து - கம்போடியா!
தாய்லாந்து - கம்போடியா நாடுகளுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன.
தாய்லாந்து - கம்போடியா எல்லை தொடர்பான பிரச்சனையில் இரு நாடுகளுக்கு இடையே போர் மூண்டது. போரின் தொடக்கத்திற்கு இரு நாடுகளும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வந்த நிலையில், போரின் 5 ஆவது நாளான இன்று(ஜூலை 28) இரு நாட்டுத் தலைவர்களுடன் மலேசிய பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கம்போடியா பிரதமர் ஹுன் மானெட், தாய்லாந்து தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சயாசாய் ஆகியோருடன் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் இன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். சீனா, அமெரிக்க பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர்.
இதில், எந்த நிபந்தனையுமின்றி போரை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. அதன்படி இன்று நள்ளிரவு(ஜூலை 29) முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது.

முன்னதாக, அமெரிக்காவுடனான வர்த்தகம் பாதிக்கும் என எச்சரித்ததைத் தொடர்ந்து இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கம்போடியா பிரதமர் ஹுன் மானெட் கூறுகையில், "அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அறிவுறுத்தலின்பேரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தாய்லாந்து, கம்போடியா இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன" என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.