போர் விமான விபத்து: வங்கதேசத்துக்கு உதவத் தயார் - பிரதமர் மோடி
வங்க தேசத்தில் விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம் விபத்துக்குள்ளான விவகாரத்தில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பயிற்சியில் ஈடுபட்டிருந்த போர் விமானம், பள்ளியில் விழுந்து விபத்துக்குள்ளான செய்தி அதிர்ச்சி அளிப்பதாகவும், மாணவர்கள் உள்பட இதில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளதாவது,
டாக்காவில் போர் விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி மற்றும் வருத்தம் அளிக்கிறது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் உடனடியாக குணமடைய பிரார்த்திக்கிறேன். வங்கதேசத்துடன் இந்தியா ஒற்றுமையை பேணுகிறது. இந்த விவகாரத்தில் அனைத்து சாத்தியமான உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
வங்கதேசத்தில் விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம், பள்ளி வளாகத்தில் விழுந்து நொறுங்கியதில் 19 பேர் பலியாகினர். 50க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலைநகரான டாக்காவிற்கு வடக்கே உள்ள உத்தரா பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது பிற்பகல் 2.03 மணிக்கு அங்கிருந்த மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். 50க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க |நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்கக் கோரி மாநிலங்களவை உறுப்பினர்கள் நோட்டீஸ்!