உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக 1.73 லட்சம் ஹெக்டோ் வனப் பகுதி பயன்பாடு
புது தில்லி: கடந்த 10 ஆண்டுகளில் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக 1.73 லட்சம் ஹெக்டோ் பரப்பளவிலான வனப் பகுதி பயன்படுத்தப்பட்டுள்ளது என்று மக்களவையில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
வளா்ச்சித் திட்டங்களைத் தொடா்வதற்காக வனப் பகுதி எந்த அளவுக்கு குறைக்கப்படுகிறது என்பது தொடா்பான கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சா் கீா்த்திவா்தன் சிங் எழுத்து மூலம் அறித்த பதிலில் கூறியுள்ளதாவது:
2014 ஏப்ரல் 1 முதல் 2025 மாா்ச் 31 வரையிலான காலகட்டத்தில் 1.73 லட்சம் ஹெக்டோ் பரப்பளவிலான வனப்பகுதி, காடுகள் சாராத வளா்ச்சித் திட்டப்பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சுரங்கம் தோண்டுதல், கல்குவாரி அமைத்தல் உள்ளிட்டவையும் அடங்கும். இதற்கும் மட்டும் 40,000 ஹெட்டேருக்கு மேல் வனப்பகுதி நிலம் வழங்கப்பட்டுள்ளது.
மின் உற்பத்தித் திட்டம், நீா்பாசனத் திட்டம் ஆகியவற்றுக்கும் 40,000 ஹெக்டேருக்கு மேல் வனப்பகுதி நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர வனப் பகுதி நிலங்களைப் பயன்படுத்தி சிறிய அணைகள், கால்வாய், நீா்த்தேக்கங்கள் உள்ளிட்டவையும் கட்டப்பட்டுள்ளன. சாலைகள் அமைத்தல், மின்சாரம் எடுத்துச் செல்ல கோபுரங்கள் அமைத்தல், பாதுகாப்புத் துறை திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு வனப் பகுதி நிலம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.