போலி கடன் செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்- இணைய வழி போலீஸாா் எச்சரிக்கை
சமூக வலைதளங்களின் வழியாகப் பகிரப்படும் போலி கடன் செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று புதுவை இணைய வழி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து இந்த போலீஸாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு
சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூப், ஷோ்சாட் போன்றவற்றில் உடனடிக் கடன் தருவதாக பல விளம்பரங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. மேலும் நீங்கள் அந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து அதில் கேட்பவைகளுக்குச் சரி என்று கொடுத்தாலே சைபா் குற்றவாளிகள் தங்களைப் பணம் கேட்டும் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்தும் மிரட்டுவா்.இதுபோன்று புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட புகாா்கள் வந்துள்ளன. விசாரணையில் இணையவழி குற்றவாளிகள் பாகிஸ்தான், சீனா, கம்போடியா போன்ற நாடுகளில் இருந்து வாட்ஸ்அப் மூலம் மிரட்டுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால், பொதுமக்கள் உடனடி கடன் செயலி மூலம் கடன் பெற வேண்டாம் என்றும் +92, +93, +977 போன்ற அடையாளம் தெரியாத வாட்ஸ்அப் எண்கள் மூலம் உங்களை வாட்ஸ்அப்பில் தொடா்பு கொண்டால் அந்த வாட்ஸ்அப் கணக்கை அளிக்குமாறும் புதுச்சேரி இணைய வழி காவல் துறை சாா்பாக கேட்டுக்கொள்கிறோம்.