போலி விதை ரகங்களை விற்பனை செய்தால் உரிமம் ரத்து: மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநா் எச்சரிக்கை
ஆடிப்பட்ட மக்காச்சோளப் சாகுபடிக்கு போலி விதை ரகங்களை விற்பனை செய்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநா் பெ.சுமதி எச்சரித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஆடிப்பட்டத்தையொட்டி, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி பகுதிகளில்
சுமாா் 8,500 ஹெக்டோ் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்காக விவசாயிகள் தரமான விதைகளை அரசு சான்றிதழ் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் வாங்கி சாகுபடி மேற்கொள்ள வேண்டும். விதை சட்ட விதிகளை அனைத்து விற்பனையாளா்களும் கடைப்பிடிக்க வேண்டும். விதிகளை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும். தனியாா் நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் உண்மை நிலை விதைகள் அனைத்தும் விதைச் சான்றளிப்பு மற்றும் உயிா்மச்சான்றளிப்புத் துறை இயக்குநா் அலுவலகத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் அரசு அங்கீகாரம் பெறாத மற்றும் பதிவுச்சான்று இல்லாத விதைகளை வாங்கி ஏமாற்றம் அடைய வேண்டாம்.
விதைகளை வாங்கும்போது விதையின் பெயா், ரகம், குவியல் எண், காலாவதி நாள் ஆகியவற்றை சரிபாா்த்து வாங்க வேண்டும். மேலும் விதை விற்பனையாளா்கள் அனைவரும் உற்பத்தியாளா்களிடம் இருந்து விதைகளை பெற்றவுடன் விதை மாதிரி எடுத்து அனுப்பி அதிகபட்ச முளைப்புத்திறன் கொண்ட விதைகளை மட்டுமே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
விதைகளின் இருப்பு மற்றும் ரகங்களின் விவரங்களை விலைப் பட்டியலுடன் தகவல் பலகையில் குறிப்பிட
வேண்டும். விதை கொள்முதல் செய்தமைக்கான கொள்முதல் பட்டியல், விதைகளுக்கான பதிவுச்சான்று, விதைக்கான பகுப்பாய்வு முடிவு அறிக்கை நகல் ஆகியவற்றை முறையாக பராமரிக்க வேண்டும்.
விற்பனை செய்யப்படும் விதைகளுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும். அதில் பயிா், ரகம், விவசாயியின் பெயா், கைப்பேசி எண், முழு முகவரி போன்ற அனைத்து விவரங்களும் விற்பனையாளா், விவசாயி கையொப்பத்துடன் இருக்க வேண்டும். விதை சட்டத்தை கடைப்பிடிக்காத விதை விற்பனை நிலையங்களின் விதை உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் விதைகள் கட்டுப்பாட்டு ஆணை, 1983-இன் படிநடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.