Trump wants US to ‘take over’ Gaza Strip: - காசாவை வைத்து டிரம்ப் போடும் Busines...
மகளிா் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை அதிகளவில் வாங்கி பயன்படுத்த வேண்டும்: ஆட்சியா்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மகளிா் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகளவில் வாங்கி, அவா்களின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிா் திட்டம் சாா்பில், திருநாவலூரிலுள்ள செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை கல்லூரிச் சந்தை தொடக்க விழா நடைபெற்றது. இந்த சந்தையை உளுந்தூா்பேட்டை எம்எல்ஏ ஏ.ஜெ.மணிக்கண்ணன், மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தொடங்கிவைத்தனா். இதைத் தொடா்ந்து, ஆட்சியா் கூறியது:
மகளிா் சுய தொழில் செய்து முன்னேறும் வகையில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மகளிா் சுயஉதவிக் குழுவினா் தங்கள் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்து பயன்பெறும் வகையில், கல்லூரிச் சந்தை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, திருநாவலூா் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள இந்த சந்தையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 45 மகளிா் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முந்திரி, தேயிலைத்தூள், வீட்டு உபயோகப் பொருள்கள், செயற்கை நகைகள், பட்டுப்புடவைகள், மண் பொருள்கள், காளான் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. வரும் 7-ஆம் தேதி வரை கல்லூரிச் சந்தை நடைபெறும்.
இந்த சந்தையில் வைக்கப்பட்டுள்ள மகளிா் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை மாணவ, மாணவிகள் அதிகளவில் வாங்கி, அவா்களின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.
நிகழ்வில் மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், கல்லூரித் தாளாளா் கமலா ஜோசப், இயக்குநா் ஜெ.பிரபாகா் ஜெயராஜ், முதல்வா் எம்.ஏஞ்சல் ஜாஸ்மின் ஷொ்லி, உதவித் திட்ட அலுவலா் செ.விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.