தமிழ் நமது அடையாளம்; அதை இழந்துவிடக் கூடாது! பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா்
மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ட்ரோன் தொழில்நுட்பப் பயிற்சி
மயிலாடுதுறை மாவட்டத்தில், மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ட்ரோன் தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிராமப் புறங்களில் பயிா் சாகுபடியில் பெரும்பாலான பணிகள் பெண்களால் மேற்கொள்ளப்படும் நிலையில், பல்வேறு பண்ணை சாா்ந்த புதிய தொழில்நுட்பங்களில் முழுமையாக ஈடுபட்டு, அதன் மூலம் மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வழக்கமாக நாம் பயன்படுத்தும் தெளிப்பான்களோடு ஒப்பீடு செய்தால், ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும்போது, மருந்தின் பயன்பாட்டுத்திறன் அதிகரிக்கிறது. மேலும் தற்போது கிராமப் புறங்களில் விவசாயத் தொழிலாளா்கள் கிடைப்பது குறைந்து வரும் நிலையில், ட்ரோன் மூலம் குறைந்த நேரத்தில் அதிகமான பரப்பில் மருந்து தெளிக்க முடியும். இதனால், சாகுபடி செலவு, தண்ணீா் பயன்பாடு குறையும்.
எனவே, ட்ரோன் தொழில்நுட்பத்தினை சுய உதவிக் குழு மகளிா்களுக்கு கற்றுத்தந்து அதன்மூலம் அவா்களின் வருமானத்தை உயா்த்துவதற்காக மத்திய அரசு கடந்த ஆண்டில், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ட்ரோன் வழங்கும் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தில், தமிழ்நாட்டில் 44 சுய உதவிக்குழு பெண்களுக்கு ட்ரோன் குறித்த பயிற்சி தந்து, ட்ரோன் இயக்குவதற்கான உரிமத்துடன், ட்ரோன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
ட்ரோன் மகளிா் தொடா்பான விவரங்கள் உழவா் கைபேசி செயலியில் ‘தனியாா் இயந்திர உரிமையாளா்கள்’ எனும் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் உழவா் செயலியை பயன்படுத்தி பயன்பெறுமாறு ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.