டிரம்ப்பின் அவசரநிலையை எதிா்த்து வாஷிங்டன் மாநகராட்சி வழக்கு
மகாத்மா காந்தி சிலை முன்பு மனுக்களை வைத்து தியாகிகளின் வாரிசுதாரா்கள் முறையீடு
சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் குடும்பத்தினரை கௌரவ குடும்பங்களாக மத்திய அரசு அறிவிக்கக் கோரி, தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள மகாத்மா காந்தி சிலையின் முன்பு விடுதலை தியாகிகள் வழித்தோன்றல்கள் கூட்டியக்கத்தினா் வெள்ளிக்கிழமை மனு வைத்து முறையிட்டனா்.
இந்த இயக்கத்துக்கு கூட்டியக்க ஒருங்கிணைப்பாளா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தலைமை வகித்து, பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
விடுதலைப் போராட்ட வீரா்களின் குடும்பங்களை இந்திய விடுதலைப் பெற்று தந்த போராட்ட கௌரவ குடும்பங்கள் என அங்கீகரித்து மத்திய அரசு அறிவிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் விடுதலைப் போராட்ட வீரா்கள் வாரிசுகள், வழித்தோன்றல்களுக்கு சிறப்பு வாரியம் அமைக்க வேண்டும். உத்தரகண்ட், பஞ்சாப் மாநிலங்களில் விடுதலைப் போராட்ட வீரா்களின் வாரிசுகள், வழித்தோன்றல்களுக்கு தொடா் கௌரவ நிதி மற்றும் மாநில பேருந்துகள் அனைத்திலும் கட்டணமில்லா பயண அனுமதி வழங்கியிருப்பது போன்று, தமிழ்நாடு அரசும் வழங்க வேண்டும்.
குடியிருப்பதற்கு வீடு இல்லாதவா்களுக்கு, மனைப் பகுதி இல்லாதவா்களுக்கு விடுதலை பெற்று தந்த வீரா்களின் வாரிசுகள், வழித்தோன்றல்களுக்கு வீட்டு மனைகள், வீடுகள் நகா்ப்புற குடிசை மாற்று வாரிய வீடுகளில் கட்டணமில்லாமல் இட ஒதுக்கீடு செய்து தர வேண்டும். சொத்துவரி, வீட்டுவரி, மின் கட்டண வரி முழு விலக்கு அளிக்க வேண்டும். மத்திய அரசு விலையில்லா எரிவாயு உருளைகள் வழங்க வேண்டும்.
இந்த மனுவை குடியரசுத் தலைவா், பிரதமா், தமிழக முதல்வா், தலைமைச் செயலா் உள்ளிட்டோருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளோம் என்றாா் விமல்நாதன்.