மகாராஷ்டிரா: சம்மதம் தெரிவித்த ஷிண்டே; இன்று புதிய முதல்வரைத் தேர்வும் செய்யும் மஹாயுதி கூட்டணி!
மகாராஷ்டிராவில் நாளை புதிய அரசு பதவியேற்கிறது. தேர்தல் முடிவுகள் கடந்த 23-ம் தேதியே வந்துவிட்டபோதிலும், அமைச்சரவை பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. தேர்தலில் பா.ஜ.க கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. தற்போது முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே ஆரம்பத்தில் முதல்வர் பதவியில் இருந்து விலக மறுத்தார். பின்னர் முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்த ஏக்நாத் ஷிண்டே, தனக்கு உள்துறை இலாகாவுடன் கூடிய துணை முதல்வர் பதவிவேண்டும் என்று அடம்பிடித்தார். இதனால் அரசு பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. உடல் நலம் பாதிக்கப்பட்டு ஓய்வு எடுத்து வரும் ஏக்நாத் ஷிண்டேயை நேற்று மாலை துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து பேசினார். ஒரு மணி நேரம் நடந்த இப்பேச்சுவார்த்தையில் புதிய அரசில் சேரவேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டேயிடம் தேவேந்திர பட்னாவிஸ் கேட்டுக்கொண்டார்.
அதனை ஏக்நாத் ஷிண்டே ஏற்றுக்கொண்டதாக பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்தனர். டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசிவிட்டு வந்த பிறகு 6 நாள்கள் கழித்து இருவரும் சந்தித்து பேசியிருக்கின்றனர். துணை முதல்வர் அஜித் பவார் இந்த சந்திப்பில் பங்கேற்கவில்லை. அவர் டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்காக சென்றுள்ளார். இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் இன்று கூடி கட்சியின் மேலிட பார்வையாளர்கள் முன்னிலையில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கின்றனர். அதனை தொடர்ந்து பா.ஜ.க மேலிட பார்வையாளர்கள் நிர்மலா சீதாராமன், விஜய் ரூபானி ஆகியோர் ஏக்நாத் ஷிண்டேயை சந்தித்து பேசுகின்றனர்.
இச்சந்திப்பின் போது அதிகாரப் பகிர்வு குறித்து பேசப்படும் என்று பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்தன. நாளை புதிய அரசு பதவியேற்கும் போது முதல்வர் மற்றும் இரு துணை முதல்வர்கள் மட்டும் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு அதிகாரப் பகிர்வு குறித்து பேசி முடிவு செய்த பிறகு மற்ற அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று சிவசேனா நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், அதிகாரப் பகிர்வு குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. உள்துறை இலாகா குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அனைத்தும் இறுதி செய்யப்பட்ட பிறகு புதிய அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று தெரிவித்தார். டெல்லியில் முகாமிட்டுள்ள அஜித் பவார் இன்று அமித் ஷாவை சந்தித்துவிட்டு மும்பை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சரவையில் சிவசேனாவிற்கு கொடுக்கப்படும் அதே எண்ணிக்கையிலான அமைச்சர்களை தங்களுக்கும் கொடுக்கவேண்டும் என்று அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பேசத்தான் அஜித் பவார் டெல்லி சென்றுள்ளார். இன்று அவர் மும்பை திரும்பியதும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் மற்றும் இரு துணை முதல்வர்கள் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர இருக்கின்றனர். ஆசாத் மைதானத்தில் பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு 40 ஆயிரம் பேரை அழைத்து வர மூன்று கட்சிகளும் திட்டமிட்டுள்ளன. இதில் 10 ஆயிரம் பேர் ஏக் ஹை தோ சேஃப் ஹைன் என்ற வாசகம் இடம் பெற்ற டீ-சர்ட் அணிந்து பங்கேற்க இருக்கின்றனர்.
அதோடு தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் 19 மாநில முதல்வர்களையும் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளனர். இது தவிர பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா போன்ற முக்கிய மத்திய அமைச்சர்களும் இதில் பங்கேற்க இருக்கின்றனர்.