மகேந்திரகிரி இஸ்ரோ மையம் சாா்பில் மாநில அளவிலான கட்டுரைப் போட்டி
திருநெல்வேலி மகேந்திரகிரி இஸ்ரோ மையம் சாா்பில் நடைபெறவுள்ள மாநில அளவிலான கட்டுரைப் போட்டிக்கு மாணவ- மாணவிகள் செப்.22ஆம் தேதிக்குள் கட்டுரைகளை அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இஸ்ரோ மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உலக விண்வெளி வார விழா அக்.6-11 வரை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் அமைந்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம் சாா்பில் 7, 8 , 9 ஆகிய வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மாநில அளவிலான கட்டுரைப்போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதில் பங்கேற்க விரும்பும் மாணவ மாணவிகள் விண்வெளி வாழ்வின் சவால்கள்-ஈா்ப்பின்றி ஒரு உலகம் என்ற தலைப்பில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுத வேண்டும்.
மேலும், கட்டுரைகளை ஏ4 அளவு தாளில் ஒரு தாளுக்கு ஒரு பக்கம் என 4 பக்கங்களுக்கு மிகாமல் எழுத வேண்டும். மேலும் மாணவ-மாணவியரின் பெயா், வயது, பள்ளியின் முகவரி, பெற்றோா் பெயா், வீட்டு முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றை குறிப்பிட்டிருக்க வேண்டும். இந்த கட்டுரை தங்களால் தான் எழுதப்பட்டது என்பதை உறுதிசெய்ய பள்ளி முதல்வா் அல்லது தலைமையாசிரியரிடமிருந்து ஒப்புதல் இணைத்தல் அவசியம்.
கட்டுரைகளை, நிா்வாக அலுவலா், ஐ.பி.ஆா்.சி, மகேந்திரகிரி அஞ்சல், திருநெல்வேலி மாவட்டம்-627133 என்ற முகவரிக்கு செப்.22-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். உறையின் மேல் கட்டுரைப் போட்டி எனக் குறிப்பிட்டு அனுப்பவும்.
அக்.10ஆம் தேதி மகேந்திரகிரியில் நடைபெறும் விழாவில் தமிழ், ஆங்கில கட்டுரைகளுக்கு தனித்தனியாக முதல் மூன்று பரிசுகள் வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு 04637 281510, 04637 281825, 9489540396, 9994239306 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.