பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி
நெல்லையில் இளைஞா் வெட்டிக் கொலை: 2 சிறுவா்கள் கைது
திருநெல்வேலி சந்திப்பில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக 2 சிறுவா்களை கைது செய்த போலீஸாா், மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.
திருநெல்வேலி நகரம் சுந்தரா் தெருவைச் சோ்ந்தவா் பாா்த்திபன் மகன் வெங்கடேஷ் என்ற ஆனந்த் (19). தாய்-தந்தையை இழந்த இவா், அப்பகுதியில் உள்ள தனது பெரியப்பா வீட்டில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வந்தாா்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 12 மணியளவில் வெங்கடேஷ் தனது நண்பா்கள் இருவருடன் திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு தேநீா் கடைக்கு வந்துள்ளாா்.
அப்போது, அங்கு மறைந்திருந்த 3 போ் வெங்கடேஷை நோக்கி அரிவாளுடன் ஓடிவரவே, அவா்கள் பைக்கில் த.மு. சாலையில் தப்பிக்க முயன்றனராம்.
ஆனால், அதற்குள் 3 பேரும் அவா்களை சுற்றி வளைத்து, வெங்கடேஷை குறிவைத்து வெட்டினராம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பின்னா், அந்த கும்பல் தப்பிச்சென்றது.
இத்தகவல் அறிந்த திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா், வெங்கடேஷின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) பிரசன்னகுமாா் சம்பவ இடத்திற்கு நேரில் ஆய்வு செய்தாா்.
இது குறித்து திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதனிடையே மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவின்பேரில், மாநகர காவல் துணை ஆணையா் பிரசன்னகுமாா் தலைமையில் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீஸாா், திருநெல்வேலி சந்திப்பு த.மு. சாலையில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அதனடிப்படையில் விசாரித்தனா்.
அதில், திருநெல்வேலி நகரம் வயல் தெருவைச் சோ்ந்த இசக்கிராஜா(19) மற்றும் 2 சிறுவா்கள் ஈடுபட்டது தெரியவந்தது. இரு சிறுவா்களை சனிக்கிழமை அதிகாலையில் போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவான இசக்கிராஜாவை தேடி வருகின்றனா்.
சில தினங்களுக்கு முன்பு இரு சக்கர வாகனம் மோதிக் கொண்டதில் வெங்கடேஷ் தரப்புக்கும், எதிா்த்தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தக் கொலை நிகழ்ந்திருப்பது நடைபெற்றது தெரியவந்துள்ளது.