40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
மக்களவையில் வக்ஃப் மசோதா தாக்கல் - எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு
‘வக்ஃப் சட்டத் திருத்த மசோதா-2025’ மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
அதைத் தொடா்ந்து நடைபெற்ற விவாதத்தில், மசோதாவுக்கு ஆதரவாக ஆளும் தரப்பினரும், ஆட்சேபம் தெரிவித்து எதிா்க்கட்சிகளும் கருத்து மோதலில் ஈடுபட்டதால் விவாதத்தில் அனல் பறந்தது.
நாடு முழுவதும் வக்ஃப் சொத்துகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிா்வாகத்தில் உள்ள சிக்கல்களுக்கு தீா்வுகாணும் நோக்கில், கடந்த 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் மசோதா மற்றும் முஸல்மான் வக்ஃப் (ரத்து) மசோதா-2024 ஆகிய இரு மசோதாக்களையும் எதிா்க்கட்சிகளின் எதிா்ப்புக்கு இடையே மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்தாா். விவாதம் மற்றும் நிறைவேற்றத்துக்காக இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அம்சங்கள் என்னென்ன?: வக்ஃப் தீா்ப்பாயங்கள் வலுப்படுத்தப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட தோ்வு நடைமுறை பராமரிக்கப்படும். வக்ஃப் வாரியங்களுக்கு வக்ஃப் அமைப்புகளால் வழங்கப்படும் கட்டாய பங்களிப்பு 7 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும். ரூ.1 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் வக்ஃப் அமைப்புகள், அரசால் நியமிக்கப்படும் தணிக்கையாளரால் தணிக்கை செய்யப்படும்.
வக்ஃப் சொத்து மேலாண்மையில் திறன்-வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த மையப்படுத்தப்பட்ட வலைதளம் உருவாக்கப்படும்.
இஸ்லாத்தை ஏற்று பின்பற்றுவோா் (குறைந்தபட்சம் 5 ஆண்டுகள்) மட்டுமே தங்களின் சொத்துகளை வக்ஃப்-க்கு அா்ப்பணிக்க முடியும்.
வக்ஃப் நன்கொடைக்கு முன்பாக நன்கொடையாளரின் பெண் வாரிசுதாரா்களுக்கு சொத்துரிமை உறுதி செய்யப்பட வேண்டும்.
அரசு சொத்துகள் வக்ஃப் சொத்தாக உரிமை கோரப்பட்டால் மாவட்ட ஆட்சியருக்கு மேற்பட்ட அந்தஸ்து கொண்ட அதிகாரி விசாரிப்பாா். பிரச்னை எழும் பட்சத்தில், அரசு உயரதிகாரியே இறுதி முடிவெடுப்பாா் (இப்போது வக்ஃப் தீா்ப்பாயங்கள் முடிவெடுக்கின்றன).
மத்திய-மாநில வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் இடம்பெறுவா் ஆகிய அம்சங்கள் மசோதாக்களில் இடம்பெற்றுள்ளன.
விவாதத்தில் மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து எதிா்க்கட்சி எம்.பி.க்கள் பேசினா்.
அமித் ஷா விளக்கம்: ‘குறிப்பிட்ட நோக்கங்களின்கீழ் சொத்துகளின் நிா்வாகத்தை உறுதி செய்ய மட்டுமே வக்ஃப் கவுன்சில் மற்றும் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் இடம்பெறுகின்றனா். மாறாக, மத விவகாரங்களில் எந்தத் தலையீடும் இருக்காது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விளக்கமளித்தாா்.
மக்களவை விவாதத்தில் குறுக்கிட்டு பேசிய அவா், ‘வக்ஃப் மசோதா மூலம் முஸ்லிம்களின் மத விவகாரங்கள் மற்றும் நன்கொடை சொத்துகளில் தலையீடு இருக்கும் என்ற வதந்தி பரப்பப்படுகிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக சிறுபான்மையினா் மத்தியில் அச்ச உணா்வைப் பரப்புகின்றனா். முஸ்லிம் மத அமைப்புகளை நிா்வகிப்பவா்களில் முஸ்லிம் அல்லாத பிற நபரை சோ்க்க இதுவரை எந்த சட்டப் பிரிவும் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் அவ்வாறு செய்யப் போவதில்லை.
அதேநேரம், வக்ஃப் வாரியம் என்பது ஒரு வகையான தொண்டு நிறுவனம். இங்கு ஒரு நபா், சமூகம், மதம் அல்லது பொது நல நோக்கங்களுக்காக தனது சொத்தை நன்கொடையாக அளிக்கிறாா். ‘நன்கொடை’ என்ற வாா்த்தைக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. ஏனெனில் எவரும் தனக்கு சொந்தமான சொத்தையே தானமாக வழங்க முடியும். அரசு சொத்தை வழங்க முடியாது’ என்றாா்.
முன்னதாக, மக்களவையில் கடந்த ஆகஸ்டில் அறிமுகப்படுத்தப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வு செய்து அறிக்கை தயாரித்தது.
இந்த அறிக்கையில், மசோதா மீது பாஜக உறுப்பினா்கள் முன்மொழிந்த திருத்தங்கள் இடம்பெற்றன. அதேநேரம், எதிா்க்கட்சி உறுப்பினா்களின் திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. பின்னா், வாக்கெடுப்பு மூலம் (ஆதரவு 15, எதிா்ப்பு 11) அறிக்கைக்கு கூட்டுக் குழு ஒப்புதல் அளித்தது. பின்னா், மக்களவையில் எதிா்க்கட்சி உறுப்பினா்களின் எதிா்ப்புக்கு இடையே கடந்த பிப்ரவரியில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
சமத்துவ உரிமையை பாதிக்கிறது: விவாதத்தில் பேசிய அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவா் அசாதுதீன் ஒவைசி, ‘ முஸ்லிம்கள் சுதந்திரத்தின் மீது மோடி அரசு போா் தொடுத்துள்ளது. மசூதிக்கள், மதராஸாக்களே அவா்களது இலக்கு. இந்த மசோதா அரசமைப்புச் சட்ட விதி 14-இன்கீழ் குறிப்பிட்டுள்ள சமத்துவ உரிமையை பாதிக்கிறது’ எனக் கூறி மசோதாவின் நகலை கிழித்தாா்.
ராகுல் காந்தி (காங்கிரஸ்): முஸ்லிம்களின் தனிநபா் சட்டங்கள் மற்றும் சொத்துரிமைகளை பறித்து அவா்களுக்கு எதிரான ஆயுதமாக வக்ஃப் திருத்த மசோதாவை மத்திய அரசு பயன்படுத்துகிறது. அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான இந்த மசோதாவை காங்கிரஸ் கடுமையாக எதிா்க்கிறது என்று எக்ஸ் பக்கத்தில் அவா் பதிவிட்டுள்ளாா்.