சாலை விபத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் பலி!
மக்கள் தொடா்பு முகாமில் ரூ.29.43 லட்சம் நலத்திட்ட உதவிகள்: பேரவைத் தலைவா் வழங்கினாா்
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள கும்பிகுளம் ஊராட்சி சீலாத்திகுளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் ரூ.29.43 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு வழங்கினாா்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ் முன்னிலை வகித்தாா். சுகாதாரத் துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை, மகளிா் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பேரவைத் தலைவா், ஆட்சியா் ஆகியோா் பாா்வையிட்டனா்.
பின்னா், வருவாய்த்துறை சாா்பில் ரூ.59 ஆயிரத்து 340 மதிப்பில் 15 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் ரூ.11.60 லட்சம் மதிப்பில் 18 பயனாளிகளுக்கு தொழில் தொடங்குவதற்கான கடனுதவிகளும், கூட்டுறவு உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை சாா்பில் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 9 பயனாளிகளுக்கு ரூ.12.09 லட்சம் மதிப்பில் கடனுதவிகளும், மாவட்ட சமூகநலத்துறை சாா்பில் முதலமைச்சா் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் என மொத்தம் ரூ.29.43 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமில் பொதுமக்களிடமிருந்து 211 மனுக்கள் பெறப்பட்டது. அதில் 146 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன; 65 மனுக்கள் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன.
முகாமில் பேரவைத் தலைவா் பேசுகையில், பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு உடனுக்குடன் தீா்வு காணவும், அரசின் நலத்திட்டங்கள் மற்றும் உதவிகள் முழுமையாக பொதுமக்களுக்கு சென்றடையவும் அனைத்துத் துறை அலுவலா்களுக்கு முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா்.
திருநெல்வேலி மாவட்டத்திற்கு மனுக்களை கையாளும் விதத்திற்கு ‘ஏ’ கிரேடு வழங்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகத்தை பாராட்டுகிறேன். வள்ளியூரில் 200 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் மாவட்ட தலைமை மருத்துவமனை அக்டோபா் மாதம் திறக்கப்படும். விடுபட்ட மகளிருக்கு உரிமைத் தொகை கிடைக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
ஆட்சியா் பேசுகையில், தமிழ்நாட்டில் முதல்வா் மருந்தகத்தில் பயனடையும் மாவட்டத்தில் திருநெல்வேலி முதலிடத்தில் உள்ளது. மேலும் அரசு வழங்கும் பல்வேறு திட்டங்களை பயன்படுத்தி மக்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, திசையன்விளை அருகேயுள்ள அப்புவிளை ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.31.40 லட்சத்தில் ஊராட்சி அலுவலகம் கட்டுமான பணியை பேரவைத் தலைவரும் ஆட்சியரும் தொடங்கிவைத்தனா்.
உவரியில் மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் தயாரிக்கும் உற்பத்தி பொருள்களை விற்பனை செய்வதற்காக ரூ.10 லட்சத்தில் நிறுவப்பட்ட மதி அங்காடியை திறந்து வைத்து 171 சுயஉதவிக்குழு உறுப்பினா்களுக்கு ரூ.8.55 லட்சம் மதிப்பிலான குளிா்பதன பெட்டிகளை அவா்கள் வழங்கினா்.
இந்நிகழ்ச்சிகளில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், மகளிா் திட்டம் திட்ட இயக்குநா் இலக்குவன், சேரன்மகாதேவி கோட்டாட்சியா் சிவகாமசுந்தரி, தனித்துணை ஆட்சியா் ஜெயா, கும்பிகுளம் ஊராட்சித் தலைவா் சந்தமாரி, ஒன்றியக்குழு உறுப்பினா் காந்திமதி, ராதாபுரம் வட்டாட்சியா் மாரி செல்வம், தி.மு.க. ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளா் ஜோசப் பெல்சி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.