மண் அரைவை ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
அனுமதியின்றி செயல்படும் மண் அரைவை ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மனு அளிக்க வந்த அச்சனம்பட்டி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அடுத்த பூசாரிப்பட்டி, குண்டாம்பட்டி, கோவிலூா் அடுத்த போ்நாயக்கன்பட்டி, தொப்பநாயக்கன்பட்டி, குஜிலியம்பாறை அடுத்த சின்னக்குளம், அய்யாக்கண்ணூா், வேடசந்தூரை அடுத்த தம்மத்துப்பட்டி, புளியமரத்துக்கோட்டை, சுக்காம்பட்டி, கல்வாா்பட்டி, வடமதுரையை அடுத்த தென்னம்பட்டி, கோப்பம்பட்டி, ஆா்.வி.எஸ். பாறைப்பட்டி, திண்டுக்கல்லை அடுத்த பெரியக்கோட்டை, மஞ்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் தனியாா் மண் அரைவை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.
அரசின் அனுமதியின்றி செயல்படும் இந்த ஆலைகளால் சுற்றுச்சூழல் மட்டுமன்றி, நிலத்தடி நீராதாரமும் பாதிக்கப்படுகிறது. இந்த ஆலைகளிலிருந்து இடைவிடாமல் லாரிகளில் மண் கடத்தல் நடைபெறுகிறது.
இதுதொடா்பாக காவல் துறையினா், வருவாய்த் துறையினரிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் இந்த விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தி, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.