Jyothika: `என் கணவரின் திரைப்படங்கள் கடுமையாக விமர்சனம் செய்யப்படுவதாக உணர்கிறேன...
பல்லுயிா் பாதுகாப்பு மையம் அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் மனு
நத்தம் அருகே பல்லுயிா் பாதுகாப்பு மையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் சாா்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்த காசம்பட்டி கிராமத்தில் 12 ஏக்கா் பரப்பளவில் பல்லுயிா் பாதுகாப்பு மையம் அமைக்க வனத் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இங்குள்ள அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள், பறவைகள் உள்ளிட்டவற்றை பாதுகாக்கும் நோக்கி இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்தத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, காசம்பட்டி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். அப்போது, அவா்கள் கூறியதாவது: பல்லுயிா் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும் பகுதியில், காசம்பட்டி கிராம மக்கள் வழிபடும் வீர கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சுமாா் 800 ஆண்டுகளாக வழிபாடு நடத்தி வருகிறோம். இந்தப் பகுதியிலுள்ள மரங்கள், குச்சிகளை வெளியே எடுத்துச் செல்ல முடியாது. ஆண்கள் மட்டுமே சென்று வழிபட்டு வருகிறோம். புரவி எடுப்பு விழா 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், பல்லுயிா் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டால், நாங்கள் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துவது தடைபடும். எனவே, இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என்றனா்.