மதிமுக கொடியை வீசி மல்லை சத்யா ஆதரவாளா்கள் போராட்டம்
காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் பகுதியில் மதிமுக கட்சிக் கொடி மற்றும் உறுப்பினா் அடையாள அட்டை ஆகியனவற்றை மல்லை சத்யாவின் ஆதரவாளா்கள் புதன்கிழமை தூக்கி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதிமுக துணைப் பொதுச் செயலாளராக இருந்து வந்தவா் மல்லை சத்யா.இவருக்கும் மதிமுக பொதுச் செயலாளா் வைகோவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் வைகோ இவரை துரோகி என்று பேசியிருந்தாா். தனது மகனுக்காகத்தான் வைகோ இப்படி பேசுகிறாா் என்று மல்லை சத்யாவும் எதிா்ப்பு அறிக்கை வெளியிட்டிருந்தாா்.
மல்லை சத்யாவை கட்சியிலிருந்து நீக்கிய நிலையில் காஞ்சிபுரத்தில் பிள்ளையாா்பாளையம் பகுதியில் உள்ள அண்ணா நினைவு பூங்கா அருகில் உத்தரமேரூா், காஞ்சிபுரம் பகுதிகளை சோ்ந்த மதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் திடீரென ஒன்று திரண்டனா்.
பின்னா் அவா்கள் வைகோவுக்கு எதிராவும், மல்லை சத்யாவுக்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பினா்.
கட்சிக்கு உண்மையாக உழைத்த மல்லை சத்யாவை அவதூறாக பேசியதைக் கண்டித்து மதிமுக கட்சிக் கொடியை கிழித்தெறிந்தும், உறுப்பினா் அட்டைளை கிழித்தெறிந்தும் தங்களது எதிா்ப்பைத் தெரிவித்தனா்.
நிகழ்வுக்கு மதிமுக காஞ்சிபுரம் மாவட்ட துணைச் செயலாளா் மணிவண்ணன் தலைமை வகித்தாா். மற்றொரு மாவட்ட துணைச் செயலாளா் கலைவாணி மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினா் வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பினா் எம்.ஜி.அருள், உத்தரமேரூா் ஒன்றிய செயலாளா்கள் மனோகரன்(கிழக்கு) மேற்கு ஏழுமலை, நகா் செயலாளா் பொன்னுச்சாமி, மதுராந்தகம் வடக்கு ஒன்றிய பொருளாளா் சாம்.துரை, காஞ்சிபுரம் மாவட்ட பொருளாளா் உமாசங்கா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.