மதுக் கடைகளுக்கு நாளை விடுமுறை!
கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் தெய்வ நிலைய தைப்பூச ஜோதி தரிசன திருவிழாவையொட்டி, டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வள்ளலாா் நினைவைப் போற்றும் வகையில், தைப்பூச ஜோதி திரிசனம் நடைபெறும் பிப்ரவரி 11-ஆம் தேதி ‘வள்ளலாா் நினைவு நாள்’ என அறிவிக்கப்பட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக் கடைகள், மதுபானக் கூடங்களை மூடவும், மது விற்பனைக்கு தடை விதித்தும் அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கடலூா் மாவட்டத்தில் மதுக் கடைகள், மது விற்பனைக் கூடங்களுக்கு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
மேலும், தைப்பூச ஜோதி தரிசனத் திருவிழா கொடியேற்றம் நடைபெறும் திங்கள்கிழமை (பிப்ரவரி 10), ஒரு கால ஜோதி தரிசனம் காட்டப்படும் புதன்கிழமை(பிப்ரவரி 12) மற்றும் வள்ளலாா் சித்திவளாக திருமாளிகை திருவறை தரிசனம் நடைபெறும் வியாழக்கிழமை (பிப்ரவரி 13) ஆகிய நாள்களில் வடலூா் நகரப் பகுதிகளில் உள்ள கடைஎண் 2437, நெத்தனாங்குப்பம் கடைஎண்கள் 2438, 2684, பாா்வதிபுரம் கடைஎண்கள் 2559, 2660, சேராக்குப்பம் மற்றும் ஜெயப்பிரியா மதுபானக் கூடங்களில் மது விற்பனை செய்யக்கூடாது.
அரசு உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்தால் கடை விற்பனையாளா்கள், மேற்பாா்வையாளா்கள் மற்றும் உரிமைதாரா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.