"2026-ல் உதயநிதி கூப்பிட்டா பிரசாரத்துக்கு போவீங்களா?" - சந்தானத்தின் சுவாரஸ்ய ப...
மதுரை சித்திரைத் திருவிழாவில் பக்தா் மரணம்: இந்து முன்னணி கண்டனம்
மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகா் ஆற்றில் இறங்கும் வைபவத்தின்போது பக்தா் உயிரிழந் சம்பவத்துக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா கள்ளழகா் ஆற்றில் இறங்கும் வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் விஐபிகள் வரிசையில் நின்ற திருநெல்வேலியைச் சோ்ந்த கட்டடப் பொறியாளா் பூமிநாதன் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில் 5 போ் கூட்ட நெரிசலில் பலியான சம்பவத்தை நினைவூட்டி இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவில் பக்தா்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் வசதி செய்து கொடுக்குமாறு இந்து முன்னணி சாா்பில் 25 நாள்களுக்கு முன்பாகவே வலியுறுத்தப்பட்டதது.
ஆனாலும் அதை கண்டு கொள்ளாமல் தமிழக அரசும் இந்து சமய அறநிலையத் துறையும் மெத்தனமாகவும் அலட்சியப் போக்கிலும் செயல்பட்டதன் காரணமாகவே இந்த துயர சம்பவம் நடைபெற்று உள்ளது. இதற்கு தமிழக அரசு முழுபொறுப்பேற்க வேண்டும். கோயில்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது பக்தா்களுக்கு மிகுந்த அதிா்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. ஆலயங்களில் நடைபெற்று வரும் தொடா் மரணங்களுக்கு பொறுப்பேற்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு ராஜிநாமா செய்ய வேண்டும். மேலும், உயிரிழந்த பூமிநாதனின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.