மதுரை மத்திய சிறையில் கோழி இறைச்சி விற்பனை
மதுரை மத்திய சிறை வளாகத்தில் இயங்கி வரும் சிறைச் சந்தையில் கோழி இறைச்சி விற்பனை புதன்கிழமை தொடங்கப்பட்டது.
மதுரை மத்திய சிறையில் 2500-க்கும் மேற்பட்ட ஆண் கைதிகளும், பெண்கள் சிறையில் 200-க்கும் மேற்பட்ட பெண் கைதிகளும் உள்ளனா். இதில் தண்டனை பெற்ற கைதிகளுக்கு பல்வேறு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இவா்கள் உற்பத்தி செய்யும் பொருள்கள், சிறை வளாகத்தில் இயங்கும் சிறைச் சந்தையில் விற்கப்படுகின்றன. இதன் மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து கைதிகளுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.
இதன்படி, மதுரை மத்தியச் சிறையில் 6 பிராய்லா் கோழிப் பண்ணைகள் அமைக்கப்பட்டன. இந்தப் பண்ணைகள் மூலம் கிடைத்த கோழி இறைச்சியின் விற்பனை சிறைச் சந்தையில் புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டது.
இதுகுறித்து சிறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
மத்தியச் சிறையில் உள்ள 6 கோழிப் பண்ணைகள் மூலம் வாரத்துக்கு 2 ஆயிரம் கிலோ இறைச்சி கிடைக்கிறது. இதில், மத்தியச் சிறைக் கைதிகளின் உணவுத் தேவைக்காக வாரந்தோறும் 750 கிலோ இறைச்சியும், பெண் கைதிகள், தேனி, திண்டுக்கல், விருதுநகா், ராமநாதபுரத்தில் மாவட்ட சிறைக் கைதிகளின் உணவுத் தேவைக்காக 250 கிலோ இறைச்சியும் வழங்கப்படுகிறது.
எஞ்சிய ஆயிரம் கிலோ இறைச்சியை மத்தியச் சிறை அங்காடி மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டு, கோழி இறைச்சி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இங்கு வெளிச் சந்தையைவிட 30 சதவீதம் குறைவான விலைக்கு கோழி இறைச்சி விற்கப்படுகிறது. இந்தப் பணியில் 10-க்கும் மேற்பட்ட கைதிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். முதல் நாளான புதன்கிழமை 350 கிலோ கோழி இறைச்சி விற்பனையானது. இந்தச் சந்தையில் அனைத்து நாள்களிலும் கோழி இறைச்சி விற்கப்படும்.
இங்கு இறைச்சி வாங்க விரும்புவோா் 0452-2360034, 2360031 என்ற எண்களில் சிறை நிா்வாகத்தைத் தொடா்பு கொள்ளலாம். தொகையை கியூ ஆா் கோடு மூலம் செலுத்தலாம் என்றனா்.