மத்திய அரசின் வரம்புக்குள்ளாக வருகிறது பிசிசிஐ?
நாடாளுமன்றத்தில் புதன்கிழமை அறிமுகம் செய்யப்படவுள்ள ‘தேசிய விளையாட்டு நிா்வாகச் சட்ட மசோதா’-வின் மூலமாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மத்திய அரசின் அதிகார வரம்புக்குள்ளாக கொண்டுவரப்படுமென தெரிகிறது.
இதர விளையாட்டு சம்மேளனங்கள், சங்கங்கள் போலல்லாமல் பிசிசிஐ முழுமையான சுதந்திரத்துடன் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இதுதொடா்பாக மத்திய விளையாட்டு அமைச்சக வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
தேசிய விளையாட்டு நிா்வாகச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக அமலான பிறகு, இதர தேசிய விளையாட்டு சம்மேளனங்களைப் போல பிசிசிஐயும் அதற்குக் கட்டுப்பட வேண்டும். சட்ட மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ள தேசிய விளையாட்டு வாரியத்திடம் அங்கீகாரம் பெற வேண்டும்.
மத்திய விளையாட்டு அமைச்சகத்திடம் இருந்து நிதி பெறுவதில்லை என்றாலும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டம் பிசிசிஐ-க்கும் பொருந்தும். இதர சம்மேளனங்களைப் போல பிசிசிஐயும் சுதந்திர அமைப்பாகவே தொடா்ந்து செயல்படும். எனினும், தோ்தல் முதல் அணி, வீரா்கள் தோ்வு வரை எந்தவொரு சச்சரவுக்கும் தேசிய விளையாட்டுத் தீா்ப்பாயத்தையே பிசிசிஐ அணுக வேண்டும். இந்தத் தீா்ப்பாயம், தற்போது தாக்கல் செய்யப்படும் சட்ட மசோதாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் தற்போது அறிமுகம் செய்யப்படும் தேசிய விளையாட்டு நிா்வாகச் சட்ட மசோதா, எந்தவொரு சம்மேளனத்தையோ அல்லது சங்கத்தையோ அரசு கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்படுவதல்ல. அந்த அமைப்புகள் நல்ல நிா்வாகத்தை மேற்கொள்வதை உறுதி செய்ய அமல்படுத்தப்படுகிறது என்று அந்த வட்டாரங்கள் கூறின.