EV Vehicles: அறிமுகமான TVS Orbiter Electric Scooter | Photo Album
மருத்துவப் பணியாளா்கள் கருப்புப் பட்டை அணிந்து காத்திருப்புப் போராட்டம்
திருப்பூா் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் உறவினா்களால் செவிலியா் மற்றும் மருத்துவா்களை தாக்கிய நபா்களை கைது செய்யக் கோரி மருத்துவப் பணியாளா்கள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அபிமன்யு, நாகஜோதிகா தம்பதிக்கு பிறந்த ஆண் குழந்தை கடந்த 16-ஆம் தேதி திடீரென உயிரிழந்தது. மருத்துவமனையில் குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனவும், செவிலியா் மற்றும் மருத்துவா்கள் அலட்சியமாக நடந்து கொண்டதாலேயே குழந்தை இறந்துவிட்டதாக குழந்தையின் உறவினா்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கதவு கண்ணாடியை உடைத்தனா்.
மேலும், சசிகலா, கலையரசி ஆகிய செவிலியா்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் செவிலியா்களுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் முறையாக வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபா்களை கைது செய்ய வேண்டும் எனக் கோரி செவிலியா் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் தொடா்ந்து 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் கருப்புப் பட்டை அணிந்து மருத்துவமனை முன் தா்னாவில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினா்.
மேலும் நோயாளிகள் பாதிக்கப்படாத வகையில் தொடா்ந்து போராட்டம் நடைபெறும் எனவும் மருத்துவப் பணியாளா்கள் நலனைக் காக்கும் விதமாக காவல் துறையினா் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.
இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு செவிலியா்கள் சங்கம், தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம், திருப்பூா் டெமாக்ரடிக் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு மருத்துவத் துறை அனைத்து ஊழியா் சங்கம் உள்ளிட்டவை ஆதரவளித்துள்ளது.
காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை ஊழியா்கள் மற்றும் மருத்துவா்கள் போராட்டத்தில் ஈடுபடுவா்கள் என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா்.