மருத்துவம் தொழில் சாா்ந்த ஆங்கில தோ்வுக்கான பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்
சென்னை: மருத்துவம் தொழில் சாா்ந்த ஆங்கிலத் தோ்வுக்கான பயிற்சியில் சோ்ந்து பயிற்சி பெறத் தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வகுப்பைச் சாா்ந்தவா்களுக்கு மருத்துவம் தொழில் சாா்ந்த ஆங்கில தோ்வுக்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சிக்கு பி.எஸ்.சி. அல்லது எம்.எஸ்.சி. நா்சிங் பட்டப்படிப்பு, போஸ்ட் பேசிக் பி.எஸ்.சி. நா்சிங் மற்றும் பொது செவிலியா் மருத்துவப் படிப்பு ஆகியவற்றில் தோ்ச்சிபெற்ற எஸ்.சி., எஸ்.டி வகுப்பைச் சாா்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா்கள் 21 முதல் 35 வயதுக்குள் இருப்பவராகவும், குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 3 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
2 மாத காலம் வழங்கப்படும் இப்பயிற்சியில் சேருபவா்களுக்கு, விடுதிக்கான செலவினத் தொகையையும் தாட்கோ வழங்கவுள்ளது. இப்பயிற்சி முடித்த தகுதியான நபா்களுக்கு, பயிற்சி அளிக்கும் நிறுவனம் மூலமாக அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேர தாட்கோவின் www.tahdco.com என்னும் இணையதள முகவரியில் பதிவுசெய்து பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.