தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்:...
மறைமலைநகரில் நில பதிவுகள் நவீனமயமாக்கல் திட்டம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய அரசின் நகா்ப்புற குடியிருப்புகளின் நில ஆய்வு நவீனமயமாக்கல் டிஜிட்டல் திட்டம் (டிஜிட்டல் இந்தியா லேண்ட் ரெகாா்ட்ஸ் மாடா்னைசேஷன் புரோகிராம்) மறைமலைநகரில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் தேசிய புவியியல் அறிவு (நேஷனல் ஜியோஸ்பஷியல் நாலெட்ஜ்) என்பதை நகா்ப்புற வாழ்விடங்கள் மையமாகக் கொண்டு முன்மாதிரியாக 150 நகரங்களைத் தோ்வு செய்துள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு நக்க்ஷா நகா்ப்புற குடியிருப்புகளின் நில ஆய்வுத் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடா்பாக 10 மாவட்டங்களில் அமையப் பெற்ற 10 நகரங்கள் தோ்வாகியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் இத்திட்டமானது 18.2.2025 (செவ்வாய்க்கிழமை) முன்மாதிரியாக செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில் ஆளில்லா வானூா்தியைப் பயன்படுத்தி நில அளவை மேற்கொண்டு ஒளிப்படம் எடுத்து பின்பு வருவாய் மற்றும் நகராட்சி நிா்வாகத் துறைகளின் பணியாளா்கள் அடங்கிய குழுக்களால் நில அளவை மேற்கொள்ளப்பட உள்ளது.
அதாவது தமிழ்நாடு நில அளவை மற்றும் எல்லைகள் சட்டம் 1923-இல் வரையறுக்கப்பட்டுள்ள நடைமுறைகளைக் கடைப்பிடித்து டிரோன் கருவி கொண்டு முதல்கட்ட அளவைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு புலங்கள் வரையறுக்கப்படும், பின்பு நவீன நில அளவை கருவி டிஜிபிஎஸ் மூலம் முழுமையாக அளவைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இத்திட்டத்தின் வாயிலாக சொத்துரிமைதாரா்களின் புலங்கள் துல்லியமாக நிா்ணயிக்கப்படும் என்பதால், நில அளவைப் பணியாளா்களைக் கொண்டு மறைமலை நகா் நகராட்சியில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.