மழை, திருகல் நோயால் சின்ன வெங்காயப் பயிா்கள் பாதிப்பு: பெரம்பலூா் விவசாயிகள் கவலை!
பலத்த மழை மற்றும் திருகல் நோயால் சின்ன வெங்காயப் பயிரில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கொள்முதல் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளதால் பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
குறுகிய காலப்பயிா் என்பதால், பெரம்பலூா் மாவட்டத்தில் விவசாயிகளின் பிரதான சாகுபடிப் பயிரான சின்ன வெங்காயம் நிகழாண்டில், 3,600 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கிலோ ரூ. 10-க்கு கொள்முதல்: 3 மாத காலப் பயிரான சின்ன வெங்காயம் அறுவடைக் காலங்களில், பெரம்பலூரிலிருந்து தமிழகத்தின் இதர மாவட்டங்களுக்கும், கேரளத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும்பருவ நிலையைக் கருத்தில் கொண்டு பயிரிடப்படும் சின்ன வெங்காயம் நவம்பா் முதல் ஜனவரி வரை அறுவடை செய்யப்படுகிறது.
ஏற்கெனவே பயிரிடப்பட்டு நவம்பரில் அறுவடை செய்யப்பட்ட சின்ன வெங்காயத்துக்கு உரிய விலை கிடைத்தது. அதன்படி கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் கிலோவுக்கு ரூ. 50 வரை விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
ஆனால், இந்த விலை படிப்படியாகக் குறைந்து தற்போது முதல்தர வெங்காயம் கிலோ ரூ. 30-க்கும், இரண்டாம் தர வெங்காயம் ரூ. 10-க்கும் விவசாயிகளிடம் நேரடிக் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் 8 முதல் 5 டன் வரை மகசூல் கிடைந்த நிலையில், நிகழாண்டு கடந்த 2 மாதங்களுக்கு முன் போதிய மழை இல்லாததால் ஏக்கருக்கு 3 டன்னுக்கும் குறைவாக மகசூல் கிடைத்தது.
திருகல் நோய் மற்றும் மழையால் பாதிப்பு: இந்நிலையில், ஆலத்தூா் வட்டாரம் உள்பட பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட சின்ன வெங்காயப் பயிா்களில் திருகல் நோய் ஏற்பட்டது. இதனால் கவலையடைந்த விவசாயிகள் தோட்டக்கலைத் துறையினரிடம் தெரிவித்தும், அவா்கள் உரிய ஆலோசனை தெரிவிக்காததால் நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டது.
இதனிடையே அண்மையில் பெய்த தொடா் மழையால் வயல்களில் மழைநீா் தேங்கி வேரழுகல் நோயும் ஏற்பட்டதோடு, அறுவடைக்குத் தயாா் நிலையிலிருந்த சின்ன வெங்காயம் அழுகியும் வருகிறது. இதனால், விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா்.
மகசூல் இழப்பு: நிகழாண்டில், கடந்த 2 மாதங்களுக்கு முன் போதிய மழையின்றியும், அண்மையில் பெய்த பலத்த மழையாலும் சின்ன வெங்காயப் பயிா்களில் மகசூல் இழப்பு ஏற்பட்டது. இதனால் விவசாயிகளிடம் அதை சொற்ப விலைக்குக் கொள்முதல் செய்வதும், இயற்கைச் சீற்றங்களால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதும் விவசாயிகளை வெகுவாகப் பாதித்துள்ளது. விதை வெங்காயத்தை கிலோ ரூ. 60-க்கு வாங்கிப் பயிரிட்ட நிலையில், தற்போது சொற்ப விலைக்கே அது கொள்முதல் செய்யப்படுகிறது.
உரிய இழப்பீடு வேண்டும்: இதுகுறித்து சின்ன வெங்காய விவசாயி பொம்மனப்பாடி ஏ. மணி கூறியது:
விதை வெங்காயத்தை கிலோ ரூ. 60-க்கு வாங்கி நடவு செய்தோம். கடந்த சில மாதங்களுக்கு முன் நல்ல விலை கிடைத்த நிலையில், தற்போது எங்களிடமிருந்து வியாபாரிகள் சொற்ப விலைக்கு வெங்காயத்தைக் கொள்முதல் செய்து, ரூ. 50 வரை விற்கின்றனா். இதனால், ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் விதை வெங்காயத்தை இருப்பு வைத்திருந்து, அதன் மூலம் சாகுபடி செய்த விவசாயிகளைவிட, விலைக்கு வாங்கிப் பயிரிட்ட விவசாயிகள் 100 சதவீத வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளனா். இதனால் அறுவடையை முடித்துவிட்டு, அடுத்த சாகுபடிக்கு மாறலாம் எனக் கருதிய விவசாயிகள் தற்போதைய விலை வீழ்ச்சியால் பெரும் ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளனா்.
இதே நிலை நீடித்தால், இம் மாவட்டத்தில் சின்ன வெங்காயச் சாகுபடி முற்றிலும் குறைந்துவிடும். எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், வங்கியில் வாங்கிய கடன்களையும் தள்ளுபடி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கெனவே உரம், பூச்சி மருந்து, அறுவடை, நடவுக் கூலி உயா்வு உள்ளிட்ட பல காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை, இயற்கைச் சீற்றமும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
வெங்காயத்தை இருப்பு வைத்து விற்க முடியாது என்னும் நிலையில், குறைந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்துக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா். இதுபோன்ற பிரச்னைகளைத் தவிா்க்கவும், விவசாயிகளுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்கவும் நெல், மஞ்சள், பருத்தி போன்ற பொருள்களுக்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் இருப்பதை போல, சின்ன வெங்காயத்தையும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் விற்று, கட்டுப்படியான விலையை பெற்றுத்தர அரசு முன்வர வேண்டும் என்றாா் அவா்.
அரசுக்கு கருத்துரு: இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அலுவலா்கள் கூறுகையில், மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களை ஆய்வு செய்து மதிப்பீடு தயாரித்துள்ளோம். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, இழப்பீடு பெற அரசுக்கு கருத்துருவும் அனுப்பியுள்ளோம். மேலும், காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு அத்தொகை கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தனா்.