ஜிஎஸ்டி குறைப்பு வரவேற்கத்தக்கது; ஆனால், பிகார் தேர்தல் காரணமா? - காங்கிரஸ் கேள...
மழைக்கால வெள்ளப் பெருக்கைத் தடுக்கக் கோரிய மனு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
மழைக் காலங்களில் பல்லாவரம், குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் வெள்ளப் பெருக்க ஏற்பட காரணமாக உள்ள கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசு மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயற்கை ஆா்வலா் டேவிட் மனோகா் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், குரோம்பேட்டை, பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை வழியாகச் செல்லும் கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால், மழைக்காலத்தில் அந்தப் பகுதி வெள்ளக்காடாகிறது. கால்வாய்களில் மழைநீா் வடிகால் வசதியை ஏற்படுத்தி,வெள்ளப் பெருக்கைத் தடுக்கலாம்.
இதுதொடா்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா், தமிழக அரசின் முதன்மைச் செயலாளா், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலா் ஆகியோருக்கு கடந்த ஆக.1-ஆம் தேதி மனு அனுப்பினேன். ஆட்சியரின் உத்தரவுப்படி கால்வாய்கள் ஆய்வு செய்யப்பட்டு ஆக்கிரமிப்புகள் குறித்து வட்டாட்சியா் அறிக்கை தாக்கல் செய்தாா். இதையடுத்து ஆக்கிரமிப்பாளா்கள் வெளியேற்றப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஒய்.கவிதா, மழைநீா் செல்லும் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுவதைக் கட்டுப்படுத்தினால் வெள்ளப்பெருக்கைத் தடுக்கலாம் என வாதிட்டாா்.
இதையடுத்து நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.