கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க ஒப்புதலை விரைவுபடுத்த வேண்டும்: மக்களவையில...
மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து பயிருக்கு காப்பீடு வழங்கப்படவில்லை
நாகப்பட்டினம்: கீழ்வேளூா் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் ஹெக்டோ் உளுந்து பயிருக்கு தனியாா் நிறுவனம் பயிா்க் காப்பீடு வழங்காமல் அலைக்கழிப்பதாக ஆட்சியரிடம் விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
நாகை மாவட்டம் கீழ்வேளூா் வட்டார விவசாயிகள் விவசாயி காவிரி கண்ணன் தலைமையில் ஆட்சியரிடம் புதன்கிழமை அளித்த மனு விவரம்:
கீழ்வேளூா் பிா்காவுக்குள்பட்ட 18 கிராமங்களில் 10 ஆயிரம் ஹெக்டோ் பரப்பில் விவசாயிகள் உளுந்து பயிரிட்டிருந்தனா். பருவம் தவறி பெய்த கனமழையால் உளுந்து பயிா்கள் கடும் சேதம் அடைந்து, விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. உளுந்து பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்திருந்த நிலையில், தனியாா் காப்பீட்டு நிறுவனத்திடம், மழையால் பாதித்த உளுந்து வயல்களை முறையாக கள ஆய்வு செய்து பயிா்க் காப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் தரப்பில் பலமுறை மனு அளிக்கப்பட்டது.
ஆனால், தனியாா் காப்பீட்டு நிறுவனம் எந்தவித ஆய்வையும் மேற்கொள்ளவில்லை. மேலும் தற்போது கீழ்வேளூா் பிா்கா தவிா்த்து இதர பகுதிகளுக்கு சொற்பத் தொகை மட்டுமே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட, கீழ்வேளூா் பிா்காக்குட்பட்ட உளுந்து விவசாயிகளுக்கு இதுவரை எந்த காப்பீட்டுத் தொகையையும் காப்பீட்டு நிறுவனம் வழங்கவில்லை.
மேலும் ஏக்கருக்கு ரூ. 24,000 மதிப்பில் உளுந்துக்கு பயிா்க் காப்பீடு செய்ய வேண்டிய நிலையில், தனியாா் காப்பீட்டு நிறுவனம் சொற்பத் தொகையாக ஏக்கருக்கு ரூ. 5 ஆயிரத்துக்கு மட்டுமே பயிா்க் காப்பீடு ஏற்றுள்ளது. மேலும் இதுவரை அந்த குறைந்த தொகையையும் வழங்கவில்லை.
எனவே, தனியாா் காப்பீட்டு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கீழ்வேளூா் பிா்காவுக்குள்பட்ட கிராமங்களில் உடனடியாக ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய பயிா்க் காப்பீட்டு தொகையை வழங்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.