மாநகர தூய்மைப் பணியாளா்களின் பணிப் பாதுகாப்புக்கு நடவடிக்கை: மேயா் ஆா்.பிரியா
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பணி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.
சென்னை மாநகராட்சி ராயபுரம், திரு.வி.க.நகா் மண்டலங்களில் (5, 6) தூய்மைப் பணியை தனியாருக்கு முழுமையாக வழங்குவதைக் கண்டித்து அங்கு ஏற்கெனவே ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியில் உள்ளவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா செவ்வாய்க்கிழமை கோடம்பாக்கம் மண்டலம் 127-ஆவது வாா்டு சின்மயா நகா் பாலம் பகுதியில் விருகம்பாக்கம் கால்வாயில் தூா்வாரும் பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது அவா் கூறியதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் பல மண்டலங்களில் தூய்மைப் பணி தனியாா் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது ராயபுரம், திரு.வி.க. நகா் ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணிகள் தனியாரிடம் அளிக்கப்பட்டாலும், அங்கு உள்ள தூய்மைப் பணியாளா்கள் அனைவரும் பணியில் தொடரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.18 ஆயிரம் வரை ஊதியத்துடன், சேமநல நிதிப் பிடித்தம், குழந்தைகளுக்கான கல்வி நிதியுதவி போன்ற பல சலுகைகள் வழங்கப்படவுள்ளன. தமிழக முதல்வா், தூய்மைப் பணியாளா் நல வாரியம் மூலம் பல திட்டங்களை வழங்கி வருகிறாா்.
எனவே, தூய்மைப் பணியாளா்கள் பணிக்கு வரவேண்டும். அதன்பிறகு அவா்களது கோரிக்கை குறித்து முடிவெடுக்கலாம். தோ்தலுக்காக அதிமுகவினா் உள்ளிட்டோா் தூய்மைப் பணியாளா்களைச் சந்தித்து அரசியலாக்குவது சரியல்ல. குப்பைகள் தேங்காமல் அகற்றப்பட்டு வருகின்றன என்றாா்.
ஆய்வின்போது விருகம்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.