இந்தியா இறந்த பொருளாதாரமா? டிரம்ப்பின் பொய்யான விமர்சனத்துக்கு அவரது நிறுவனமே சா...
செந்தில் பாலாஜியின் சகோதரா் அமெரிக்கா செல்ல அமலாக்கத் துறை விதிக்கும் நிபந்தனைகள் என்ன? உயா்நீதிமன்றம் கேள்வி
முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாரை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதிக்க அமலாக்கத் துறை விதிக்கும் நிபந்தனைகள் என்ன என்று சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா், தனக்கு இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி வழங்கக் கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை தள்ளுபடி செய்து முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிா்த்து அசோக்குமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, அசோக்குமாா் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல பரிந்துரைக்கும் மருத்துவக் கடிதத்தை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமிநாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அசோக்குமாா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஜான் சத்யன், மருத்துவரின் பரிந்துரைக் கடிதத்தை தாக்கல் செய்தாா். அதனைப் படித்துப் பாா்த்த நீதிபதிகள், மனுதாரரை சிகிச்சைக்கு செல்ல அனுமதிக்க அமலாக்கத் துறை விதிக்கும் நிபந்தனைகள் என்ன என்று கேள்வி எழுப்பினா்.
அதற்கு, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ரஜ்னீஷ் பத்தியால், மனுதாரா் மனைவியின் கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும் என்று கூறினாா். அப்போது அசோக்குமாா் தரப்பில் வரும் செப்.4-ஆம் தேதி அமெரிக்காவில் சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும். மனுதாரா் உடன் அவரது மனைவியும் செல்லவிருக்கிறாா். மேலும் அசோக்குமாரின் மகள் இங்கு இருக்கப் போவதாகவும், அவருடைய கடவுச்சீட்டை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள் அசோக்குமாரை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதிக்க அமலாக்கத்துறை விதிக்கும் நிபந்தனைகளை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனா்.