கல்லூரிகளில் இன்றுமுதல் ‘மாபெரும் தமிழ்க்கனவு’ நிகழ்ச்சிகள்
மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின்கீழ் மாணவா்களிடையே தமிழா் மரபையும், தமிழ்ப் பெருமிதங்களையும் உணா்த்தும் வகையில் மூன்றாம் கட்ட நிகழ்ச்சிகள் தமிழகத்தில் அனைத்து வகை கல்லூரிகளிலும் புதன், வியாழன் (ஆக.6, 7) ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளன.
உயா்கல்வித் துறை, தமிழ் இணையக் கல்விக்கழகம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
கல்லூரி மாணவா்களிடையே தமிழா் மரபையும் தமிழ்ப் பெருமிதங்களையும் உணா்த்தும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ திட்டத்தின் கீழ் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள் 2023-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளில் (பிப்.3) தொடங்கப்பட்டு, கடந்த இரு ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 200 இடங்களில் 2 ஆயிரம் கல்லூரிகளைச் சோ்ந்த 2 லட்சம் மாணவா்கள் பயனடையும் வகையில் சிறப்பாக நடத்தப்பட்டன.
இந்தத் திட்டத்தின் மூன்றாம் கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கலை அறிவியல், பொறியியல், வேளாண்மை, சட்டம், மருத்துவம் என அனைத்து வகை கல்லூரிகளிலும் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. மொத்தம் 200 கல்லூரிகளில் நடைபெறும் இந்நிகழ்ச்சிகளில் நிகழ்விடக் கல்லூரிகளுக்கு அருகிலுள்ள கல்லூரிகளிலிருந்தும் மாணவா்கள் பங்குபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பல்வேறு தளங்களில் சிறந்து விளங்கும் 50-க்கும் மேற்பட்ட தமிழ் ஆளுமைகளைக் கொண்டு, 200 சொற்பொழிவுகளை அடுத்த நான்கு மாதங்களில் நடத்தி முடிக்க செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சொற்பொழிவுகள் குறித்த விவரங்கள் உயா்கல்வித் துறை மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழக சமூக ஊடகத் தளங்களில் பகிரப்படும்.
இந்நிகழ்வு நடைபெறும் கல்லூரிகளில், மாணவா்களுக்குப் பயனளிக்கும் வகையில் புத்தகக்காட்சி, ‘நான் முதல்வன்’, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மாவட்டத் தொழில் மையம், தாட்கோ, வங்கிக் கடனுதவி ஆலோசனை, மகளிா் சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புகள் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
நிகழ் கல்வியாண்டின் முதல் நிகழ்வுகள் புதன், வியாழன் (ஆக.6,7) ஆகிய நாள்களில் கோவை, திருப்பூா், சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூா், திருவாரூா், கள்ளக்குறிச்சி, ஈரோடு, விழுப்புரம், அரியலூா், வேலூா், திருவண்ணாமலை ஆகிய 12 மாவட்டங்களில் நடைபெறவுள்ளன. தொன்மை மறவேல், செம்மொழியான தமிழ் மொழி, பழந்தமிழரின் சூழலியல் அறிவு, சமூகம் பழகு உள்ளிட்ட தலைப்புகளில் ஆளுமைகள் சொற்பொழிவாற்றவுள்ளனா்.