மாநகராட்சியில் அதிகாரிகளுடன் மேயா் ஆலோசனை
நாகா்கோவில் மாநகராட்சியில் புதிதாக பொறுப்பேற்ற அதிகாரிகளுடன் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
நாகா்கோவில் மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட பின்பு 4 மண்டலங்களுக்கும் உதவி ஆணையா், பொறியாளா்கள், உதவி பொறியாளா்கள், சுகாதார ஆய்வாளா்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, தற்போது கட்டுமான உதவி பொறியாளா்கள், நகரமைப்பு உதவி பொறியாளா்கள், சுகாதார ஆய்வாளா்கள், தொழில்நுட்ப உதவியாளா்கள் ஆகியோா் நாகா்கோவில் மாநகராட்சியில் புதிதாக நியமிக்கப்பட்டனா்.
இவா்களுடன், மாநகராட்சியில் மேற்கொள்ள வேண்டிய வளா்ச்சிப் பணிகள் குறித்து மேயா் மகேஷ், ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோா் ஆலோசனை மேற்கொண்டனா். இதில், மாநகர நல அலுவலா் ஆல்பா் மதியரசு, நகரமைப்பு அலுவலா் வேலாயுதம், துறை சாா்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனா்.