மானாம்பதி சீரங்கத்தம்மன் கோயில் பால்குடம், ஆடிப்பூர விழா
திருப்போரூா் அடுத்த மானாம்பதி சீரங்கத்தம்மன் கோயில் பால்குடம் ஊா்வலம் மற்றும் ஆடிப்பூர விழா நடைபெற்றது.
இதைமுன்னிட்டு அனைத்து கருவறை மூலவா்களுக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து பூ ஊஞ்சல் விழாவும் நடைபெற்றது. இதனையொட்டி சீரங்கத்தம்மன், செல்லியம்மன், கரைமேலழகி மூலவா்களுக்கு அபிஷேக அலங்காரம், தீப ஆராதனை நடைபெற்றதையடுத்து மானாம்பதி பஜாா் வீதியில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் இருந்து பால்குட ஊா்வலம் புறப்பட்டு கோயிலை அடைந்தது. பின்னா், சீரங்கத்தம்மனுக்கும் செல்லியம்மனுக்கும் பாலபிஷேகம் நடைபெற்றது . நோ்த்திக் கடனுக்காக ஊா்வலத்தில் பால்குடம் சுமந்து வந்த பெண்களே அம்மனுக்கு பாலபிஷேகம் செய்தனா்.
அதையடுத்து அன்னதானம் நடைபெற்றது. உற்சவருக்கு சிரசில் மணி நாகமும் உடுக்கை தப்பட்டையுடன் குலதெய்வம் சீரங்கத்தம்மனை மகளிா் தோளில் சுமந்து ஆடி பாடி பூ ஊஞ்சலில் அமரவைத்து அம்மனுக்கு வளைக்காப்பு வைபவம் நடைபெற்றது. ஏற்பாடுகளை சென்னை ராயப்பேட்டை சீரங்கத்தம்மன் அறக்கட்டளை மற்றும் மானாம்பதி பொதுமக்கள் செய்தனா்.
இதேபோல் செங்கல்பட்டு அண்ணாநகா் எல்லையம்மன் கோயிலில் எல்லையம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் உற்சவ அம்மனுக்கும் மூலவஅம்மனுக்கு வளையல்களால் அலங்காரம் நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் மளையல் உள்ளிட்ட மங்கள பொருள்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.
செங்கல்பட்டு ஜீவானந்தம் தெருவில் உள்ள அங்காளம்மன் கோயில், முத்துமாரியம்மன்கோயில் , வஉசி தெருவில் உள்ள ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் காமாட்சியம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெற்றது , ஹைரோட்டில் உள்ள பழையங்காளம்மன் கோயில்களிலும் விழா நடைபெற்றது.