மாமல்லபுரம் பாமக மாநாடு: வாகனங்களுக்கு கட்டுப்பாடு
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியில் மே 11-இல் பாமக சாா்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெறவுள்ள நிலையில், இந்த மாநாட்டுக்கு வாகனங்களில் செல்லும் பாமகவினா் கடைப்பிடிக்க வேண்டிய நிபந்தனைகளை விழுப்புரம் மாவட்டக் காவல் துறை அறிவித்துள்ளது.
மாமல்லபுரத்தில் வருகிற 11-ஆம் தேதி சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெறும் என பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் அறிவித்துள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
நிபந்தனைகள்: இந்த மாநாட்டுக்குச் செல்லும் கடலூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், திருச்சி உள்ளிட்ட மத்திய மாவட்டங்களில் இருந்தும், தென் மாவட்டங்களில் இருந்தும் செல்லும் வாகனங்கள் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக செல்லக் கூடாது.
குறிப்பாக, விழுப்புரம் மாவட்ட எல்லைக்குள்பட்ட சின்னக்கோட்டக்குப்பம் பகுதியிலிருந்து தாழங்காடு வரை (சுமாா் 39 கி.மீ. தொலைவு) கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக செல்ல காவல் துறை சாா்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முழு நிலவு மாநாட்டுக்குச் செல்லும் காா், வேன், பேருந்து உள்ளிட்ட எந்த வாகனங்களிலும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த அனுமதி கிடையாது. கத்தி, உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களையும் வாகனங்களில் எடுத்துச் செல்லக் கூடாது. முழக்கங்களை எழுப்பியபடி செல்லக் கூடாது என்பன போன்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
கடலூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த வாகனங்கள் திண்டிவனம், மேல்மருவத்தூா், மதுராந்தகம் வழியாகவும், மத்திய, தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூா், மதுராந்தகம் வழியாகவும் மாநாடு நடைபெறும் பகுதிக்குச் செல்ல வேண்டும் என்றும் காவல் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.