மாரியம்மன் கோயில்களில் தீமிதி வழிபாடு
காரைக்கால்: திருநள்ளாறு அருகே இரண்டு மாரியம்மன் கோயில்களில் தீமிதி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே சுரக்குடி பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ அன்பு மாரியம்மன் கோயில் தீமிதி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
முன்னதாக கடந்த 14-ஆம் தேதி பூச்சொரிதலுடன் விழா தொடங்கியது. முக்கிய நிகழ்வான தீமிதி வழிபாட்டையொட்டி மூலஸ்தான அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா புறப்பாடாகி, கோயில் அருகே அமைக்கப்பட்ட தீக்குண்டம் பகுதிக்கு எழுந்தருளினாா்.
மாலை 6 மணியளவில் பக்தா்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக தீக்குழியில் இறங்கிச் சென்று அம்மனை வழிபட்டனா். ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
மழை மாரியம்மன் கோயில்: திருநள்ளாறு பகுதி கீழாவூா் பகுதியில் தா்பாரண்யேஸ்வரா் கோயில் சாா்புடைய தலமான ஸ்ரீ மழை மாரியம்மன் கோயிலில் தீமிதி உற்சவம் கடந்த 20-ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தீமிதி வழிபாடு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. திரளான பக்தா்கள் தீக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.