மாவட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: சட்டப் பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு
திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை தமிழ்நாடு சட்டப் பேரவை பொது நிறுவனங்கள் குழுவினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
திருப்பூா் குமாா் நகரில் உள்ள துணை மின் நிலையத்தில் திறன் மேம்படுத்துதல் தொடா்பான பணிகள், முதலிபாளையம் தாட்கோவில் உள்ள பின்னலாடை தொழிற்பேட்டையில் நடைபெற்று வரும் பணிகளை தமிழ்நாடு சட்டப் பேரவை பொது நிறுவனங்கள் குழுத் தலைவா் ஏ.பி.நந்தகுமாா் தலைமையிலான குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.
தொடா்ந்து, கரைப்புதூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் சாயக்கழிவு நீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்துவது குறித்தும், கவுண்டன்பாளையம் முழுநேர நியாய விலைக் கடையில் அத்தியாவசியப் பொருள்கள் இருப்பு குறித்த விவரங்களையும் கேட்டறிந்தனா்.
இதையடுத்து, திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டுமானப் பணி, அவிநாசி பேரூராட்சியில் தாட்கோ வணிக வளாகம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தனா். பின்னா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனா்.
இக்கூட்டத்தில், ஆதிதிராவிடா் நலத் துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் சுயதொழில் கடன், மருத்துவக் காப்பீட்டு அட்டை, இலவச வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் இயந்திரம் என மொத்தம் 29 பயனாளிகளுக்கு ரூ.51.02 லட்சம் நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.
இதைத் தொடா்ந்து, குழுத் தலைவா் ஏ.பி.நந்தகுமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருப்பூா் மாவட்டத்தில் பொது நிறுவனங்கள் குழு சாா்பில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் மூலம் அரசு ஊழியா்களுக்கு வீடுகள், ஆதிதிராவிட மக்களுக்கு வீட்டு வசதி, நீராதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டிய வழிமுறைகள், தொழிலாளா் நலன் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆய்வு தொடா்பாக இந்தக் குழு விவாதித்து பேரவைக்கு அறிக்கையை சமா்ப்பிக்கும். சாயக்கழிவு ஆலைகளில் தேங்கும் மிக்சா் உப்பு தொடா்பான கேள்விக்கு, ஆய்வின்போது கடைசியாக தேங்கும் 2 சதவீத உப்பு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக என்பதைப் பாா்வையிட்டோம். அவை மூட்டைகளில் கட்டி கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும் என ஆலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
இதில், தமிழ்நாடு சட்டப் பேரவை பொது நிறுவனங்கள் குழு உறுப்பினா்களும், சட்டப் பேரவை உறுப்பினா்களுமான க.அசோகன், எம்.எஸ்.எம்.ஆனந்தன், ஈ.ஆா்.ஈஸ்வரன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கடம்பூா் ராஜு, மு.பெ.கிரி, ம.சிந்தனைச்செல்வன், த.வேலு, மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், சட்டப் பேரவை அரசு முதன்மைச் செயலா் சீனிவாசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ்கிரிஷ் அசோக், மாநகர காவல் துணை ஆணையா் ராஜராஜன், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.