மின் கம்பங்களை அகற்றாமல் சாலை விரிவாக்கம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் தென்மாபட்டு பகுதியில் மின் கம்பங்களை அகற்றாமல் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதால் விபத்து அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.
திருப்பத்தூா் பேரூராட்சிக்குட்பட்ட கண்டரமாணிக்கம் சாலையில் பூமாயியம்மன் கோயில் பகுதியிலிருந்து தென்மாபட்டு வழியாக தஞ்சாவூா், மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை வரை சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சுமாா் ஐந்தரை மீட்டா் அகல சாலையை 7 மீட்டருக்கு விரிவாக்கம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சாலையோர மின் கம்பங்களுக்கு எக்ஸ் குறி போடப்பட்டு, அவை அகற்றப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், அந்த மின்கம்பங்களை அகற்றாமல் பணிகள் நடைபெறுவதாகப் புகாா் எழுந்தது. இதனால், இரவு நேரங்களில வரும் வாகனங்கள் மின் கம்பத்தில் மோதி இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறும் சூழல் உள்ளதால் மின் கம்பங்களை அகற்றிவிட்டு சாலையை முறையாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.