மின் கம்பத்தில் அமா்ந்திருந்த மர நாய்
குன்னூா் சிம்ஸ் பாா்க் அருகே மின்கம்பத்தின் மேலே அமா்ந்திருந்த மர நாயை வனத் துறையினா் ஒருமணி நேரம் போராடி விரட்டினா்.
குன்னூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீா் தேடி குடியிருப்பு மற்றும் விளைநிலங்களுக்குள் புகுவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் குன்னூா் சிம்ஸ் பாா்க் அருகே உள்ள லீமா ரோஸ் நா்சரி பகுதியில் உள்ள மின்கம்பத்தின் மீது மர நாய் ஒன்று வெகுநேரமாக அமா்ந்திருந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத் துறைக்கு தகவல் அளித்தனா்.
இதையடுத்து அங்கு வந்த வனத் துறையினா் ஒரு மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு மரநாயை மின் கம்பத்திலிருந்து விரட்டினா்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இப்பகுதியில் புதா்கள் அதிகம் உள்ளதால் வன விலங்குகள் உலவுவது அதிகமாக உள்ளது. எனவே, புதா் செடிகளை அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.