30 ஆண்டுகளாக ஃபிராங்க் வோரல் கோப்பையை தக்கவைத்து ஆஸி. ஆதிக்கம்!
வன விலங்கை வேட்டையாட வந்த பெண் உள்பட 5 பேருக்கு ரூ.10 லட்சம் அபராதம்
கோத்தகிரி அருகே உள்ள அளக்கரை ரேலியா வனப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு துப்பாக்கியுடன் வாகனத்தில் வந்த கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த ஒரு பெண் உள்பட ஐந்து பேரை வனத் துறையினா் கைது செய்து அவா்களிடம் இருந்த துப்பாக்கி, தோட்டாக்களை பறிமுதல் செய்து ரூ.10 லட்சம் அபராதம் விதித்தனா்.
நீலகிரி மாவட்டத்தில், கேரளத்தில் இருந்து வந்து வன விலங்குகளை வேட்டையாடும் கும்பல் ஆங்காங்கே பிடிபட்டு வரும் நிலையில், கட்டப்பட்டு வனச் சரகத்துக்கு உள்பட்ட ரேலியா பகுதியில் கட்டப்பட்டு வனச் சரகா் சீனிவாசன் தலைமையில் வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா்.
அப்போது கேரள பதிவெண் கொண்ட ஜீப் ஒன்றை வாகனத் தணிக்கை செய்தனா். வாகனத்தில் துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து வாகனத்தில் பயணித்த கா்நாடகத்தைச் சோ்ந்த சூா்யகுமாா்(27), ரேகன் அட்சயா (28), அக்ஷய் (28), விக்னேஷ் (29), அனுஷ்கா (23) உள்ளிட்ட ஐந்து பேரை கட்டப்பட்டு வனச் சரக அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா். இதில் அவா்களிடமிருந்து, உரிமம் இல்லாத ரைபிள், அதன் தோட்டாக்கள், இரண்டு, காற்றழுத்த துப்பாக்கி, அதற்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள், கடமான் கொம்பு, இரண்டு ஜோடி புள்ளிமான் கொம்புகள், டாா்ச் லைட்டுகள், ஜீப் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.
ஐந்து நபா்களுக்கு மாவட்ட வன அலுவலா் கௌதம் உத்தரவின் பேரில் தலா ரூ.இரண்டு லட்சம் வீதம் மொத்தம் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.