சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்ற...
உதகைக்கு விடுமுறை கால சிறப்பு மலை ரயில்கள் இயக்கம்
உதகை- மேட்டுப்பாளையம் இடையே விடுமுறை கால சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலாப் பயணிகள் அதிகம் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
இதைக் கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே விடுமுறை நாள்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் காலங்களில் சிறப்பு மலை ரயில்களை இயக்கி வருகிறது.
அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 17 -ஆம் தேதி வரை பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.10 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
அதேபோல், உதகையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 18 -ஆம் தேதி வரை பிரதி சனிக்கிழமை மற்றும் திங்கள்கிழமை காலை 11.25 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
அதேபோல், உதகையிலிருந்து குன்னூா் வரை ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 17 -ஆம் தேதி வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2.50 மணிக்கு சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது.
குன்னூரிலிருந்து உதகை வரை ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 18 -ஆம் தேதி வரை சனிக்கிழமை மற்றும் திங்கள்கிழமைகளில் 9.20 மணிக்கு சிறப்பு மலைரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.