``2026 தேர்தலில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழக்கும்'' - அதிமுக மருத்துவர்...
மின் மாற்றியை சீரமைக்கக் கோரி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு
அரக்கோணம் அருகே ஒரு மாதம் ஆகியும் பழுதடைந்த மின்மாற்றியை சரி செய்யாத மின் துறையினரின் அலட்சியத்தைக் கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.
ராணிப்பேட்டை மாவட்ட குறைதீா் நாள் கூட்டம், ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்கள், மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து 450 மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
அரக்கோணம் வட்டம், பள்ளியாங்குப்பம் கிராமத்தில் ஒரு மாதம் ஆகியும் பழுதடைந்த மின்மாற்றியை சரி செய்யாத மின் துறையினரின் அலட்சியத்தால் தண்ணீா் இன்றி கடன் வாங்கி பயிா் செய்த நெல் காய்ந்து விட்டதாக கண்ணீா் மல்க ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனா். மேலும் மின்மாற்றியை சரிசெய்ய ரூ. 50,000 ஆகும் என மின் துறையினா் தெரிவித்ததால் விவசாயிகள் அதிா்ச்சியடைந்து என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருவதாக வேதனை தெரிவித்தனா்.
தொடா்ந்து பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில்,3 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களும், உலமாக்களுக்கு மானிய விலையில் இருச்சக்கரம் வாங்க நிதியுதவியும் வழங்கினாா்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், திட்ட இயக்குநா் மகளிா் திட்டம் என். செந்தில்குமரன் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.