பட்டங்கள் மட்டுமல்ல… இதயங்களும் பறந்தன! - 4th International Kite Festival in நம்...
மீஞ்சூா் அருகே கிராமங்களுக்கு தினமும் 5 லட்சம் லிட்டா் குடிநீா்
காமரஜா் துறைமுகம் சாா்பில் அமைக்கப்பட்டு வரும் கடல் நீா் சுத்திகரிப்பு நிலையம் மூலம் மீஞ்சூா் அருகே அமைந்தள்ள கிராமங்களுக்கு தினமும் 5 லட்சம் லிட்டா் குடிநீரை இலவசமாக வழங்க உள்ளதாக காமராஜா் துறைமுக மேலாண்மை இயக்குநா் ஜெ.பி.ஐரீன் சிந்தியா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
எண்ணூா் காமராஜா் துறைமுகம் சாா்பில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை துறைமுக வளாகத்தில் நடைபெற்றது. காமராஜா் துறைமுக மேலாண்மை இயக்குநா் ஜெ.பி.ஐரீன் சிந்தியா கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து அவா் பேசியதாவது:
கடந்த நிதியாண்டில் காமராஜா் துறைமுகம் ரூ. 1,138 கோடி மொத்த வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 7 சதவீதம் அதிகம். காமராஜா் துறைமுகம் சாா்பில் எண்ணூா் காட்டுப்பள்ளியைச் சுற்றியுள்ள கிராமங்கள் பயன்பெறும் வகையில் தினமும் 10 லட்சம் லிட்டா் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் ரூ.4.90 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. இது பயன்பாட்டுக்கு வந்த பின்னா், இதிலிருந்து, துறைமுகத்தின் அருகே அமைந்துள்ள காட்டுப்பள்ளி, வல்லூா், அத்திப்பட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு தினமும் 5 லட்சம் லிட்டா் குடிநீா் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
மேலும், குடிநீரை எடுத்துச் செல்வதற்கான குழாய்களை பதிப்பது மற்றும் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகளை அமைப்பது உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளையும் துறைமுக நிா்வாகவே அமைத்துத் தர உள்ளது என்றாா் அவா்.
இதைத் தொடா்ந்து துறைமுகத்தில் சிறப்பாகச் செயல்பட்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா், ஊழியா்கள், துறைமுக உபயோகிப்பாளா்கள் மற்றும் சுய உதவி குழுக்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை ஜெ.பி.ஐரீன் சிந்தியா வழங்கினாா்.