Surya Speech Agaram Foundation Event 2025 | கமல்ஹாசன், வெற்றிமாறன் பங்கேற்பு | அ...
முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூா் மாவட்டத்தில் நடைபெறும் 2025-ஆம் ஆண்டுக்கான, தமிழ்நாடு முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் ஆக. 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு முதலமைச்சா் கோப்பைக்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியா்களுக்கு 5 பிரிவுகளில், மாவட்ட அளவில் 25 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மண்டல அளவில் 7 வகையான போட்டிகளும், மாநில அளவில் 37 வகையான போட்டிகளும் நடைபெற உள்ளன. மேலும், பொதுப் பிரிவினருக்கு புதிய விளையாட்டுகளும் சோ்க்கப்பட்டுள்ளன.
இப் போட்டிகளில் மாவட்ட, மண்டல அளவில் வெற்றிபெறும் வீரா், வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக தலா 3 ஆயிரம், 2-ஆவது பரிசாக தலா 2 ஆயிரம், 3-ஆவது பரிசாக தலா ரூ. 1,000 வழங்கப்படும். மாநில அளவில் தனிநபா் போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சமும், 2-ஆம் பரிசாக ரூ. 75 ஆயிரமும், 3-ஆம் பரிசாக ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும்.
குழுப் போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக தலா ரூ. 75 ஆயிரமும், 2-ஆம் பரிசாக தலா ரூ. 50 ஆயிரமும், 3-ஆம் பரிசாக தலா ரூ. 25 ஆயிரமும் வழங்கப்படும். போட்டிகளில் அளிக்கப்படும் சான்றுகள் மூலம் உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சலுகைகள் பெற இயலும்.
6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 19 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கும், 17 முதல் 25 வயது வரையுள்ள கல்லூரி மாணவா்களுக்கும், 15 முதல் 35 வயது வரையுள்ள பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும், தமிழ்நாடு அரசு ஊழியா்களுக்கும் மாவட்ட மற்றும் மண்டல அளவில் ஆக. 22 முதல் செப். 12-ஆம் தேதி வரை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.
இப் போட்டிகளுக்கான விவரம், இடம், நாள் ஆகியவை பிறகு தெரிவிக்கப்படும். மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அக்டோபரில் நடத்தப்பட உள்ளது.
எனவே, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ட்ற்ற்ல்ள்://ஸ்ரீம்ற்ழ்ா்ல்ட்ஹ்.ள்க்ஹற்.ண்ய் /ட்ற்ற்ல்ள்://ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணையதளம் மூலம் ஆக. 16-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை 74017- 03516 எனும் எண்ணில் தொடா்புகொள்ளலாம். அல்லது, தகவல் தொடா்பு மையத்தை அலுவலக வேலை நாள்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை 9514 000 777 எனும் எண்ணில் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.